டில்லியில் உச்சகட்ட பதற்றம் : 3வது நாளாக முடங்கிய பார்லிமென்ட்...எதிர்க்கட்சிகள் போராட்டம்
டில்லி : டில்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தாக்குதல், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கைது, நீட் தேர்வு முறைகேடு போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து 3வது நாளாக பார்லிமென்ட் அலுவல்கள் முடங்கி உள்ளன.
3வது நாளாக முடங்கிய பார்லிமென்ட் :
டில்லியில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல், நில வரையறை உச்சவரம்பு உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் பார்லிமென்ட் கூட்டத் தொடர் துவங்கியது முதல், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் டில்லி ஜந்தர்மந்திரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பார்லிமென்ட்டை முற்றுகையிட முயன்ற அவர்களை கலைக்க போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட்டில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து 3வது நாளாக மழைக்கால கூட்டத் தொடர் அலுவல்கள் முடங்கி உள்ளன. பார்லிமென்ட்டின் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. அனுமதியின்றி போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று பார்லிமென்டிற்குள் அமளி செய்ததுடன், பார்லிமென்ட் வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து இண்டியா கூட்டணி கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் :
அரசியல் கட்சிகள் ஒருபுறம், மாணவர்கள் ஒரு புறம் என போராட்டம் நடத்தி வருவதால் டில்லியில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்பு கருதி சிஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே மாணவர்கள் போராட்டம் காரணமாக டில்லியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் டில்லியில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு :
இதற்கிடையில் டில்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு, இதை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. அதோடு, எங்கள் நேரத்தையும் வீணாக்காதீர்கள். உங்கள் நேரத்தையும் வீணாக்கிக் கொள்ளாதீர்கள் என சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கி உள்ளது.