அடுத்து என்ன செய்யலாம்? தவெக முதல் அதிமுக வரை...தீவிர ஆலோசனையில் கட்சிகள்

Su.tha Arivalagan
May 05, 2026,05:14 PM IST

சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தாலும் தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தவெக அதிகபட்சம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து என்ன செய்யலாம் என வெற்றி பெற்ற தவெக மட்டுமல்ல, தோல்வி அடைந்த மற்ற கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.


தமிழக சட்டசபை தேர்தல் 2026 முடிவுகள் :


தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில்,

தவெக - 108

திமுக கூட்டணி-73

அதிமுக கூட்டணி - 53 இடங்களை பெற்றுள்ளன. 


ஆளும் கட்சியாக இருந்த திமுக.,வில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். தேர்தல் தோல்வியை தொடர்ந்து தனது முதல்வர் பதவியை அவர் இன்று ராஜினாமா செய்துள்ளார். 

மு.க.ஸ்டாலின் சட்டசபைக்கு செல்ல முடியாததால் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. திமுக தான் எதிர்க்கட்சி என்பது உறுதியாகி விட்டது. 


தவெக ஆலோசனை :


போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 108 இடங்களில் வெற்றி பெற்று பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது விஜய்யின் தவெக. இருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களை அவர்கள் பெறவில்லை. இருந்தாலும் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னருக்கு கடிதம் எழுதியதுடன், 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 


பெரும்பான்மைக்கு இன்னும் 10 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு தேவை. இதை எப்படி பெறுவது? அடுத்து என்ன செய்வது? என தனது கட்சி எம்எல்ஏ.,க்களுடன் தீவிரமாக பனையூர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார் விஜய். இதில் அவரை சட்டசபை தவெக தலைவராக எம்எல்ஏக்கள் தேர்வு செய்துள்ளனர். நாளை ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் விஜய்.


ஆதரவு கரம் நீட்டும் கட்சிகள் :




திமுக கூட்டணியில் இதுவரை அங்கம் வகித்து வரும் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகும் மனநிலைக்கு வந்து விட்டன. ஆதரவு தரும் படி தவெக அழைத்தால் அது பற்றி ஆலோசிக்க தயார் என இடதுசாரி கட்சிகள் ஏற்கனவே தெரிவித்து விட்டன.


தவெக கேட்டால் அது பற்றி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என காங்கிரசும் கூறி விட்டது. தவெக.,விற்கு ஆதரவு தருவது தொடர்பாக இடதுசாரிகளுடன் சேர்ந்து முடிவு எடுப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் ஓப்பனாக கூறி விட்டார். 


ஆதரவு தருமா அதிமுக?


மற்றொரு புறம் தவெக.,விற்கு ஆதரவு தருவதா, வேண்டாமா என்பது பற்றி அதிமுக.,வும் ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. பாஜக., வை தனது கொள்கை எதிரி என விஜய் கூறி இருந்தார். தற்போது அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாஜக ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. 


பாஜக பலம் இழந்து இருப்பதால், தவெக .,விற்கு ஆதரவு தரும் மனநிலைக்கு அதிமுக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி தனது கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏ.,க்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.


யாருடைய ஆதரவை விஜய் ஏற்பார்?


திமுக.,வை வீழ்த்த வேண்டும் என்பது தான் விஜய்யின் பிரதான நோக்கமாக இருந்தது. காங்கிரஸ், விசிக ஆகியோரின் கூட்டணியை விஜய், தேர்தலுக்கு முன்பே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். திரும்பத் திரும்பவும் திருமாவை அழைத்துக் கொண்டிருந்தார்.


விக்கிரவாண்டி மாநாட்டிலேயே கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என விஜய் கூறி விட்டதால், இப்போது ஆட்சி பொறுப்பேற்ற போகும் விஜய் பக்கம் செல்ல திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தயாராகி விட்டன. ஆனால் காங்கிரஸ் 5, விசிக 2, இடதுசாரிகள் 4 ஆகிய நான்கு கட்சிகளை சேர்த்தால் தான் தவெக ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்கும். 


இவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தால், அதற்கு பிறகு யாராவது ஒருவர் தங்களின் ஆதரவை வாபஸ் வாங்கினால் கூட விஜய் தலைமையிலான ஆட்சி கவிழும் நிலை ஏற்படும். இதை விஜய்யும் நிச்சயம் யோசிப்பார்.


அதே சமயம் 53 எம்எல்ஏ.,க்களை வைத்திருக்கும் அதிமுக.,வின் ஆதரவை ஏற்றால் ஆட்சிக்கு பிரச்சனை ஏற்படாது. தற்போது பாஜக இல்லாமல் அதிக எம்எல்ஏ.,க்களை அதிமுக வைத்திருப்பதால் விஜய் அதையும் பரிசீலிக்க வாய்ப்புள்ளது.