பெரும்பான்மை பெறாத தவெக.. அடுத்து என்ன நடக்கும்.. ஆளுநர் என்ன முடிவெடுப்பார்?

May 05, 2026,05:14 PM IST

சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அடுத்து என்ன நடக்கும்? என்ற கேள்வி பரவலாக கேட்கப்பட்டு வருகிறது.


தமிழக சட்டசபை தேர்தல் 2026 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  விஜய்யின் தவெக கட்சி 108 இடங்களை வென்றுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வென்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இடங்களான 118 இடங்களை எந்த தனிக்கட்சியோ அல்லது கூட்டணியோ பெறவில்லை. விஜய்யின் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், அவர்களுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 


இதனால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெறுவதற்கு மற்ற கட்சிகளின் ஆதரவை பெற வேண்டிய நிலையில் தவெக உள்ளது. தற்போதைய சூழலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கணிசமான இடங்களில் வெற்றி பெற்று, ஆனால் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், தமிழக அரசியல் நகர்வுகள் இந்திய அரசியல் சாசனத்தின்படி எவ்வாறு அமையும்? இதோ விரிவான பார்வை:


1. ஆளுநரின் அதிகாரமும் அழைப்பும் :




அரசியல் சாசன விதி 164-ன் படி, முதலமைச்சரை நியமிக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு உண்டு. தொங்கு சட்டசபை ஏற்படும் போது, ஆளுநர் தனது 'விருப்ப அதிகாரத்தை' பயன்படுத்தி பின்வரும் வரிசைப்படி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம்:


பெரிய கட்சி: தனிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும், அதிக இடங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில் தவெக.,வை அழைத்து அரசு அமைக்கக் கோரலாம்.


தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி: பல கட்சிகள் இணைந்து பெரும்பான்மையை (118+) நிரூபிக்கத் தயார் என்று கடிதம் அளித்தால், அவர்களை ஆளுநர் அழைக்கலாம்.


2. பெரும்பான்மையை நிரூபித்தல் ...


ஆளுநரால் நியமிக்கப்படும் முதலமைச்சர், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் (பொதுவாக 15 நாட்கள்) சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இது 'நம்பிக்கை வாக்கெடுப்பு' என அழைக்கப்படும்.


3. 'எஸ்.ஆர். பொம்மை' தீர்ப்பின் முக்கியத்துவம் :


1994-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பு, இத்தகைய சூழலில் மிக முக்கியமானது. இதன்படி, ஒரு கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஆளுநர் மாளிகையில் தீர்மானிக்கக் கூடாது; மாறாக, சட்டமன்ற மாமன்றத்தில் (Floor of the House) மட்டுமே வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க வேண்டும்.


4. யாருக்கும் பெரும்பான்மை இல்லையெனில்?


ஒருவேளை எந்தவொரு கட்சியாலும் அல்லது கூட்டணியாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால்:


குடியரசுத் தலைவர் ஆட்சி: விதி 356-ன் கீழ், மாநிலத்தில் அரசியல் சாசன இயந்திரம் சீர்குலைந்து விட்டதாகக் கருதி ஆளுநர் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம்.


மறு தேர்தல்: நிலையான அரசு அமைய வாய்ப்பே இல்லை எனும் பட்சத்தில், (அதாவது 6 மாதத்திற்குள்) சட்டசபையைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.


தமிழக அரசியல் வரலாற்றில் 1952-க்குப் பிறகு இதுவரை இத்தகைய தொங்கு சட்டசபை சூழல் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், 2006 சட்டசபைத் தேர்தலில் தனிப்பட்ட கட்சி எதுவும் பெரும்பான்மை பலத்தைப் பெறாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் திமுக கூட்டணிக்கு 163 இடங்களில் வெற்றி கிடைத்திருந்தது. இதனால் பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெறாமல் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தன. இதனால் திமுக தனித்து ஆட்சியமைத்தது. அப்போது திமுக தனிப் பெரும் கட்சியாக 96 இடங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


ஆனால் தற்போதைய நிலையில், வித்தியாசமான சட்டசபையாக இது அமைந்துள்ளத என்பதால், என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நூலகமும் நானும்.. மயிலாப்பூர் முதல் பாஸ்டன் வரை!

news

அமைதியா இரு

news

Short Story by Sudha Thirunarayanan: பை!

news

தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!

news

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை

news

பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

அதிகம் பார்க்கும் செய்திகள்