நெல்லை ஸ்பெஷல் முந்திரிக் கொத்து சாப்பிட்டிருக்கீங்களா!

Su.tha Arivalagan
Nov 12, 2026,02:10 PM IST

- பசுங்கிளி


வாங்க அக்கா/அண்ணாச்சி.. மத்தியானமாய்ருச்சு சாப்பிட்டியளா..  என்ன சாப்பாடு உங்க வீட்ல. பெறவு உங்களுக்காக ஒரு டிப்ஸோட வந்திருக்கேன் பாத்தியளா.. அதுதாம்ணே முந்திரிக் கொத்து.. இது எங்க ஊரு நெல்லை பக்கம் ரொம்ப பேமஸ் தெரியும்லா!


வாங்க எப்படி செய்றதுன்னு உங்களுக்குச் சொல்லித் தாரேன்.


தேவையான பொருட்கள்:


1) பாசி பயிறு (தோலுடன்) - 1/2 கிலோ

2) வெல்லம் (அல்லது) கருப்பட்டி - 1/2 கிலோ

3) தேங்காய் - 1

4) அரிசி மாவு - 1/4 கிலோ

5) ஏலக்காய் - 10

6) எண்ணெய் - தேவைக்கேற்ப


இப்போம் செய்றது எப்படின்னு பாப்போமா?




பாசிப்பயிரை வாணலியில் கொட்டி நன்றாக வறுக்கவும். கருக விடாமல் பதமாக வறுத்து நன்றாக ஆற விடவும். சூடு குறைந்தவுடன் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். 


கருப்பட்டியை நன்றாக உடைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு பாத்திரம் வைத்து கருப்பட்டியை அதில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதித்து கருப்பட்டி கரைந்தவுடன் சல்லடையில் ஊற்றி வடிகட்டி கொள்ளவும்.


தேங்காயை துருவி வாணலியில் கடாய் வைத்து துருவிய தேங்காயை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும், பாசிப்பயறு மாவு, ஏலக்காய், தேங்காய் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கொட்டி கிளறவும். கருப்பட்டி பாகை மாவில் ஊற்றி நன்றாக கிளறி சிறு சிறு உருண்டையாக பிடிக்கவும்.


அரிசி மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் கொட்டி தோசை மாவு பதத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான சூடு வந்தவுடன் பாசிப்பயறு உருண்டையை அரிசி மாவில்

நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.


இதை ஒரு வாரம் வரைக்கும் வச்சு சாப்பிடலாம் பாத்துக்கிடுங்க, அவ்வளவு நல்ல ருசியா இருக்கும்.