மனநலன் காப்போம்.. மனம் செம்மையானால்.. மருந்தே தேவையில்லைங்க!

Su.tha Arivalagan
Oct 10, 2026,01:32 PM IST

- பசுங்கிளி


இன்று மன நல தினம், மனம் செம்மையானால் மருந்துவம் தேவையில்லை. மனம் விட்டு பேசுவோம், மகிழ்ச்சியாக இருப்போம், மன நலத் திறனை மேம்படுத்த உதவும் சில அன்றாட நடைமுறைகள் உங்களுக்காக சொல்கிறேன் கேளுங்கள்.


உதாரணமாக காலை எழுந்தவுடன் ஒரு ஐந்து நிமிடம் அமைதியாக உட்கார்ந்து ஆழமாக மூச்சு இழுத்து விட்டு

மூச்சு பயிற்சி செய்யலாம், இறை வழிபாட்டில் மனதை செலுத்தலாம், சின்ன சின்ன உதவிகளுக்கு நன்றி சொல்லலாம், வீட்டில் செடிகள் வளர்க்கலாம், அதை பராமரிப்பதில் மனம் மகிழ்ச்சியாகும்.


நம் உடலை போலவே மனதிற்கும் ஓய்வு தேவை என்பதை புரிந்து கொண்டு எல்லா வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்யாமல் சிறிது சிறிதாக செய்யலாம். ஒரு இடத்திற்கு செல்லும் முன்பு தேவையான பொருட்களை முதல் நாளே தயார் செய்து வைத்துக்கொள்ளலாம், சின்ன சின்ன தோல்விகள் வந்தாலும்  அதை பெரிது படுத்தாமல் அதனாலென்ன அடுத்தது என்னவென்று மனதை தைரியப்படுத்திக்கொண்டு செல்ல வேண்டும்.


ஓய்வு நேரங்களில் சிறிய நடைப் பயிற்சி செய்யலாம், நல்ல நண்பர்களோடு மனம் விட்டு பேசலாம், மனதுக்கு பிடித்த மெல்லிசை பாடல்கள் பாடலாம், அல்லது கேட்கலாம், மனம் என்பது உடல் நலத்திற்கு சமமான முக்கியத்துவம் உடையது , கவலை, கோபம், தோல்வி ஏமாற்றம் வாழ்வில் வந்தாலும் அவற்றை சமாளித்து மீண்டும் தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்.




இன்றைய காலத்தில் கல்வி, வேலை மற்றும் குடும்ப  சூழ்நிலைகளால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால் நம் மனதை அமைதியாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்வது அவசியம். நல்ல நண்பர்களோடு பேசுவது, குடும்பத்தினரிடம் மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்வது, இயற்கையை ரசிப்பது, உடற்பயிற்சி செய்வது, போதிய உறக்கம் பெறுவது , இறை வழிபாட்டில் மனதை செலுத்துவது, பிறருக்கு நம்மால் முடிந்த உதவிகள் செய்வது, விட்டுக்கொடுத்து போவது போன்றவை மனநலத்தை மேம்படுத்தும்.


முக்கியமாக மனதில் ஏதாவது பிரச்சனைகள்  இருந்தால் அதை மறைத்து வைக்காமல் நல்ல நம்பிக்கை உடைய நண்பர்களிடமோ உறவினரிடமோ பகிர்ந்து கொள்ளலாம். மனம் நன்றாக இருந்தால், வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்பதே உண்மை. எனவே உடலைப் பேணுவது போலவே மனதையும் பேணுவோம் நம்பிக்கையுடன் 

சிந்தித்து, நல்லதையே நினைத்து, அன்போடு வாழ்ந்து நம் மனதை பாதுகாப்போம்.