பட்டாளத்து மாப்பிள்ளை!

Su.tha Arivalagan
Oct 24, 2026,01:39 PM IST

ராஜஸ்ரீ


ராமசாமி வீட்டிற்கு கல்யாண தரகர் கந்தசாமி வந்தார். அவர்  ராமசாமியிடம் உங்க  மகளுக்கு ஏற்ற வரன் வந்திருக்கு என்றார். அதைக்கேட்ட ராமசாமி பையன் எங்கே வேலை செய்யறான்? என்று கேட்டார்.


அதற்கு கந்தசாமி பையன் பேர் மகேஷ்.  பட்டாளத்துல வேலை செய்யறான் என்றார். அதைக் கேட்ட ராமசாமி பட்டாளத்திலியா.. என்று இழுத்து பின் இந்த வரன் வேண்டாம் என்றார்.


கந்தசாமி ஏன், பட்டாளத்துல இருந்தா என்ன? என்று கேட்டார். இல்ல கந்தசாமி, பட்டாளத்துல இருந்தா எது வேண்டுமானாலும் ஆகலாம். பொண்ணை கஷ்டப்பட்டு வளர்த்து கடைசியில பட்டாளத்தில இருக்கிற மாப்பிள்ளைக்கு கொடுக்க விருப்பமில்லை. அதனால இந்த வரன் வேண்டாம். வேற வரன் பாருங்க என்றார்.


கந்தசாமியும் சரி என்று கூறி கிளம்பி விட்டார். பையன் மகேஷிடம் விவரத்தை கூறினார். அற்கு மகேஷ் நானே அவரிடம் பேசிப் பார்க்கிறேன் என்றான்.


அதன்படி  மகேஷ் ராமசாமி வீட்டிற்குச் சென்று தன்னை வேண்டாம் என்று சொன்னதற்கு என்ன காரணம்? என்று கேட்டான்.


ராமசாமியும்  அதே காரணத்தை கூறினார். அப்பொழுது ராமசாமியின் மகன் செல்வம் வந்தான்.


மகேஷை பார்த்ததும் ஹாய் மகேஷ். என்னடா எங்க வீட்டிற்கு வந்திருக்கே? என்று கேட்டான்.




மகேஷ் இது உங்க வீடா? அப்ப இவர்..? என்று கேட்டான்.


செல்வம் அவர்  எங்க அப்பா என்றான்.


ராமசாமிக்கு வியப்பாக இருந்தது. செல்வத்திடம் ஏன்டா, இவரை உனக்கு தெரியுமா? என்று கேட்டார்.


அதற்கு செல்வம் அப்பா, இவர் என் கூடத்தான் வேலை செய்யறார் என்று பதிலளித்தான்.  


ராமசாமி இவர் பட்டாளத்துலதானே வேலை செய்யறார் என்று கூற செல்வமும் ஆமாம் என்றான்.


ராமசாமி என்னப்பா குழப்பறீங்க. பட்டாளத்துல வேலை செய்யற  இவர் எப்படி உன் கூட வேலை செய்ய முடியும்? என்று கேட்டார்.


உடனே மகேஷ் சார், ஒரு நிமிஷம். நீங்க பட்டாளம்னு எதை நினைச்சிண்டிருக்கீங்க? என்று கேட்டான்.


ராமசாமியும் இந்த மிலிட்ரி ராணுவம் அதானே பட்டாளம் என்றார்.


மகேஷ் சிரித்தவாறு சார்..நானும் உங்க மகனும்  பெரம்பூருக்கு அருகில் உள்ள பட்டாளத்தில் ஒரு கம்பெனியில வேலை செய்யறோம்  என்றான்.


ராமசாமி அவ்வளவுதானா.  நீங்க பட்டாளத்திலே வேலை செய்யறதா தரகர் சொன்னவுடனே ராணுவத்துல வேலை செய்யறதா நினைச்சிண்டேன். அங்க இருந்தா போரில் எந்த நேரமும் உயிர் போயிடும் என்பதால்தான் உங்களை வேண்டாம்னு சொல்லிட்டேன். இப்ப குழப்பம் போயிடுத்து. அதனால என் பொண்ணு உங்களுக்குத்தான் என்றார்.


பிறகு மகேஷ் கூறினான்.


சார், இப்படி எல்லோருமே ராணுவத்தில் இருப்பவனுக்கு தங்கள் பெண்ணை கொடுக்க மாட்டோம் என்று சொன்னால் அப்புறம் ராணுவத்தில் சேர யாருக்கும் ஆர்வம் வராது. அப்புறம் நம்  நாட்டை எதிரிகளிடமிருந்து  காப்பது யார்? அது மட்டுமல்ல. உயிர் போவது  என்பது  அவரவர்களின் விதிப்படி நடக்கும். ராணுவத்தில் இருந்தாலே  எந்நேரமும் உயிர் போகும் என்பதில்லை.  


அதைக்கேட்ட ராமசாமி ஆமாம் தம்பி, உண்மைதான். இப்ப நான் ராணுவ வீரர்களை ரொம்ப மதிக்கிறேன். அவர்கள் நாட்டிற்காக செய்யும் தியாகங்களை எண்ணி மிகவும் பெருமைபடறேன். இப்ப நீங்க உண்மையிலேயே ராணுவத்தில் இருந்தாலும் நிச்சயம் என் பெண்ணை உங்களுக்குத்தான் கொடுப்பேன். சரி, இனி உங்க திருமணத்தில் சந்திப்போம் என்று சிரித்தவாறு கூறினார்.


(வி.பி.ஸ்ரீநிவாசன் என்ற இயற்பெயர் கொண்டவர் ராஜஸ்ரீ. சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)