வெறும் பொடியாகவே வாயில் போட்டு சுவைக்கலாம்.. அது என்ன சொல்லுங்க!
- ந. லட்சுமி
மன்னார்குடி: சின்னச் சின்ன உடல் நல உபாதைகளுக்கும் டாக்டரிடம் ஓடுவது நமது வழக்கமாகி விட்டது. ஆனால் அந்தக் காலத்தில் நம்ம வீட்டில் பாட்டிகள், அம்மாக்கள் கொடுத்த வீட்டு வைத்தியம் அத்தனை ஒசத்தியாக இருந்தது. இப்போதும் கூட அதை பின்பற்றலாம். நல்ல பலன் கொடுக்கும்.
அப்படிப்பட்ட சில கை கொடுக்கும் கை மருந்து பற்றிப் பார்ப்போமா
1. சளி / இருமலுக்கு வீட்டு வைத்தியம்
வெற்றிலைச் சாறு ஒரு ஸ்பூன்+இஞ்சி சாறு ஒரு ஸ்பூன்+ மிளகு தூள் ஒரு சிட்டிகை+தேன் சிறிதளவு கலந்து குடித்தால் மூக்கில் நீர் கொட்டுதல், இருமல், தொண்டை வலி குறையும்.
2. வயிற்று எரிச்சல் / அஜீரணம் வீட்டு வைத்தியம்
சீரகம்+ சோம்பு+ ஓமம் மூன்றையும் சூடான வெறும் சட்டியில் இளம் வருவலாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டால், வயிற்றுப் பொருமல், நெஞ்செரிச்சல், புளிச்ச ஏப்பம், செரிக்காமல் எதுக்களித்துக் கொண்டு வருவது இவற்றிற்கு ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் அரை ஸ்பூன் இந்த பொடியை போட்டு குடித்தால் மிக விரைவில் இத்தகைய பிரச்சனைகள் எல்லாம் சீராகும்.
வெறும் பொடியாகவே வாயில் போட்டும் சுவைக்கலாம்.
வெறும் சீரகம் கொதிக்க வைத்து குடித்தாலும் அஜீரணப் பிரச்சனைகள் சரியாகும்.
3. சிறியவெட்டு காயம் / இரத்த காயங்களுக்கு வீட்டு வைத்தியம்
தும்பைச் செடியின் வேரை மட்டும் நறுக்கிவிட்டு முழு செடியையும் நன்கு சுத்தம் செய்துவிட்டு, சிறிதளவு வெற்றிலை பாக்கு போடுவதற்கு பயன்படுத்தும் சுண்ணாம்பை சேர்த்து(2 மிளகு அளவுக்கு) சிறு கை உரலில் இடித்து, காயத்தை கொட்டும் தண்ணீரில்(Free Flow water) சுத்தமாக கழுவி விட்டு அதன் பிறகு, எடுத்து வைத்திருக்கும் சாற்றை நேரடியாகப் அடிபட்ட காயத்தில் பிழிந்து விட வேண்டும்.
ஒரே நாளில் வலி குறைந்துவிடும். தடுப்பூசி போட்டால் எப்படி தொற்று வராமல் குணமடையுமோ, அதுபோல் காயம் விரைவில் குணமடைந்து விடும்.
தினமும் தேங்காய் எண்ணெய் மட்டும் போட்டுக் கொண்டே வர வேண்டும்.
இவை அனைத்தும் நாங்கள் வழி வழியாக பயன்படுத்தி, பயன் பெற்ற மருத்துவம் ஆகும்.
(ந.லட்சுமி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)