விரைந்திங்கு வாருமம்மா வேண்டும் வரம் தாருமம்மா!
- பசுங்கிளி
வெள்ளிக்கிழமையிலே விளக்கேற்றி காத்திருந்தேன்
சர்க்கரை பொங்கலிட்டு சாந்தமுடன் காத்திருந்தேன்
மகாலட்சுமியே மனம் மகிழ்ந்து வாருமம்மா
மங்களங்கள் தாருமம்மா
சனிக்கிழமையிலே சாமையில் பொங்கல் வைத்து
சந்தோஷமாய் காத்திருந்தேன் சந்தானலட்சுமியே
சௌபாக்கியம் தாருமம்மா
ஞாயிற்று கிழமையிலே நவதானிய பொங்கல் வைத்து
நயமோடு காத்திருந்தேன் கஜலட்சுமி தாயே நீ
கருணையோடு வாருமம்மா
திங்கள் கிழமையிலே தினை மாவு இடித்து வைத்து
திவ்யமாய் காத்திருந்தேன் தனலட்சுமி தாயே நீ
தயங்காமல் வாருமம்மா
செவ்வாய்க்கிழமையிலே சிவப்பரிசி பொங்கல்
வைத்து, சிரம் தாழ்த்தி காத்திருந்தேன்
வரலட்சுமி தாயே நீ வணங்குகிறேன் வாருமம்மா
புதன் கிழமையிலே வரகு அரிசி பொங்கல் வைத்து
வாஞ்சையோடு காத்திருந்தேன் தனலட்சுமி தாயே நீ
வியாழக்கிழமையிலே வெண் பொங்கலும், சுண்டலும்
படைத்து வைத்து விளக்கேற்றி காத்திருந்தேன்
விஜயலட்சுமியே விரைந்திங்கு வாருமம்மா
வேண்டும் வரம் தாருமம்மா