பேளூர் தான் தோன்றீஸ்வரர் கோவில் திருக்குடமுழக்கு விழா

Su.tha Arivalagan
Mar 25, 2026,01:34 PM IST

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வசிஷ்ட நதி கரையில் அமைந்துள்ள பேளூர்  தான்தோன்றீஸ்வரர் கோவில் திருக்குடமுழுக்கு விழா இன்று 25.03.2026 கோலாகலமாக நடைபெறுகிறது. இக்கோவில் சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ளது.


இக்கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இக்கோவிலின் சிறப்புகளைப் பற்றி காண்போம்..


கோவில் வரலாறு:


தான்தோன்றீஸ்வரர் கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது என்றும்,பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர் கால கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த தலம் பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. சிவனை பஞ்சபூத தலங்களில் ஒன்றாக நிலத்தை குறிக்கும்  தலமாக  வணங்குகிறார்கள். இக்கோவிலில் உள்ள சிவபெருமான் உளி படாத தானாகவே தோன்றிய சுயம்புலிங்க வடிவில் கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 


இங்கு அமையப்பெற்றுள்ள அம்பாள் தர்மசம் வர்த்தினி என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் "அறம் வளர்த்த நாயகி "என்ற பெயரில் ஈசனின்  சன்னிதிக்கு  இடதுபுறம் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.


தலவிருட்சம்:




இக்கோவிலில் மா, பலா இலுப்பை ஆகிய மூன்று மரங்களும் சேர்ந்து ஒரே மரமாக காட்சியளிப்பது மிகவும் அதிசயமானதும், விசேஷமானதும் ஆகும். இந்த ஆலயம் 97 அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

 இக்கோவிலில் அமையப்பட்டுள்ள மண்டபம் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த 16 கால் கல்தூண் மண்டபம் ஆகும். இது நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட மண்டபம் ஆகும். கோவிலின் முன் பகுதியில் உள்ள 16 கால் மண்டபத்தில் யாழி மற்றும் குதிரை வீரன் சிற்பங்கள் கலை நுணுக்கத்துடன் அழகாக செதுக்கப்பட்ட உள்ளன. 


மேலும், பஞ்சபூதலிங்கங்கள்,  அறுபத்து மூவர், குபேர லிங்கம்,தட்சிணாமூர்த்தி, சகஸ்ர லிங்கம், ஆறுமுகசாமி, கஜலட்சுமி,  ஜேஷ்டா   தேவி, துர்க்கை, பிச்சாடனார்,காலபைரவர் போன்ற சன்னதிகளும் உள்ளன.வன்னி மரத்தடியில் நவக்கிரகங்கள் வீற்றிருக்கின்றன. சனீஸ்வரர்  காக வாகனத்தில்  ஒற்றைக்காலுடன் நின்றபடி காட்சி தருவது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.


இக்கோவிலில் மிகவும் விசேஷமான நிகழ்வு நடைபெறுவதுண்டு. சித்திரை மாதம் 3ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை சூரியனின் ஒளி க்கதிர்கள் மூலவர் மீது விழுந்து வழிபடுவது இக்கோவிலின் மிக முக்கியமான நிகழ்வாகும்.


சித்திரை திருவிழா மற்றும் சூரிய பூஜை விழாக்கள் இங்கு மிக விமர்சையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம்,ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை,ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


முகவரி:


தான்தோன்றீஸ்வரர் கோவில் சேலம் மாநகரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும், வாழப்பாடியில் இருந்து வடக்கில் ஆறு கிலோமீட்டர் தூரத்திலும், அயோத்தியா பட்டணத்தில் இருந்து கிழக்கே 18 கிலோமீட்டர் தூரத்திலும், உள்ள

பேளூரில் அமைந்துள்ளது.


இயன்றவர்கள் இன்று நடைபெறும் திருக்குடமுழக்கு  விழாவில் பங்கு பெற்று கும்பாபிஷேக நிகழ்வை கண்டு சிவபெருமான் அருள் பெறுவது சிறப்பு. 


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீக  தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.