மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொங்கல் விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பராசக்தி படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தனது இல்லத்தில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவைச் சிறப்பாக கொண்டாடி வருகிறார். அந்தவகையில், இந்த ஆண்டிற்கான பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பொங்கல் வைத்து விழாவைக் கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில் சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் பிரதமர் மோடி பசுவிற்கும் அதன் கன்றிற்கும் வேட்டி மற்றும் மாலை அறிவித்து உணவு வழங்கினார். பிரதமருடன் தமிழகத்தை சேர்ந்த பாஜக முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பராசக்தி படக்குழுவினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பிரதமர் மோடி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று தமிழில் கூறி பேச்சைத் தொடங்கினார். அதன்பின்னர், தமிழர் வாழ்வில் விவசாயிகளின் மகத்துவத்தையும், வேளாண்மையைப் போற்றுவதையும் வெளிப்படுத்தும் சிறப்பான பண்டிகை பொங்கல். பொங்கல் பண்டிகையை சர்வதேச அளவில் கொண்டாடுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்தகைய பொங்கல் பண்டிகையை தமிழ் மக்களுடன் கொண்டாடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தமிழர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆழமான தொடர்பு இருப்பதனை திருக்குறள் விளக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.