அடிமட்ட மக்களுடன் நெருக்கமாக இருந்தவர் அஜீத் பவார்.. பிரதமர் மோடி இரங்கல்

Su.tha Arivalagan
Jan 28, 2026,11:13 AM IST

டெல்லி: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார், அடி மட்ட மக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர். அவர்களுடன் நெருக்கமாக இருந்த தலைவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.


அஜீத் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜித் பவார் அவர்கள் மக்களுடன் அடிமட்ட அளவில் நேரடித் தொடர்பு கொண்ட ஒரு மக்கள் தலைவர். மகாராஷ்டிர மக்களுக்குச் சேவை செய்வதில் முன்னணியில் நின்ற உழைப்பாளி என்று பரவலாக மதிக்கப்பட்டவர். 


நிர்வாக விவகாரங்களில் அவருக்கு இருந்த புரிதலும், ஏழை மற்றும் நலிந்த மக்களை மேம்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வமும் குறிப்பிடத்தக்கவை. அவரது இந்த அகால மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி என்று தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.




இதே விபத்தில் உயிரிழந்த மற்றவர்களுக்கும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் பாராமதியில் நிகழ்ந்த துயரமான விமான விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த விபத்தில் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் துணையாக இருக்கும். இந்த ஆழமான துயரமான தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான வலிமையையும் தைரியத்தையும் வழங்க நான் வேண்டிக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


அஜீத் பவார் உள்ளிட்ட 6 பேர் பயணித்த தனி விமானம் இன்று காலை பாரமதி விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதில் படுகாயமடைந்த ஆறு பேரும் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து மகாராஷ்டிர அரசியலில் பெரும் துயரத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.