வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

Su.tha Arivalagan
Jul 23, 2026,10:19 AM IST

சென்னை: வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக, விரைவு நீதிமன்றங்களை (Fast-track courts) அமைக்க முடிவெடுத்துள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


நீட் வினாத்தாள் மோசடிகளைக் கண்டித்தும் அதற்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான மாணவர்களைத் திரட்டி கரப்பான்பூச்சி ஜனதாக் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இது நாடு முழுவதும் பரவியும் வருகிறது. டெல்லியே பதட்டமாக மாறியுள்ளது.


இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு எக்ஸ் தளப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


நமது இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் தான் அனைத்தையும் விட மிகவும் முக்கியமானது.




வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக, விரைவு நீதிமன்றங்களை (Fast-track courts) அமைக்க முடிவெடுத்துள்ளோம். இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மாணவர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது அமைகிறது.


நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்க முயல்பவர்கள் எவரும் தப்ப முடியாது என்று கூறியுள்ளார்.


ஆனால் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சியினர் கூறியுள்ளனர். இதனால் பதட்டம் நீடிக்கிறது.