பீகார் காற்று தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு!

Meenakshi
Nov 19, 2025,05:25 PM IST

கோவை: பீகார் காற்று இங்கும் வீசுகிறதோ என தோன்றியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


கோவை கொடிசியா மைதானத்தில் இன்று முதல் மூன்று நாள்கள் நடைபெறும் இயற்கை விவசாயி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டைபிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதற்காக இன்று பிற்பகல் கோவை வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுக பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொடிசியா மைதானத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அமைக்கப்பட்டிருந்த இயற்கை விவசாய அரங்குகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.


அதன்பின்னர் பிரதமர் பேசுகையில்,  கோவை மாநாட்டுக்கு தாமதமாக வந்ததற்கு நாட்டு மக்களிடமும் விவசாயிகளிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன். நான் இங்கே வந்தபோது விவசாயிகள் துண்டை சுழற்றிக்கொண்டு இருக்கிறார்கள். பீகார் காற்று இங்கும் வீசுகிறதோ என எனக்கு தோன்றியது.




பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் நிதியின் இந்த தவணை இன்று இந்த மேடையில் இருந்து நாடு முழுவதற்கும் ரூ. 18,000 கோடி விடுவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை நாட்டின் விவசாயிகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.  


ஜவுளி துறையால் பெருமை கொண்டுள்ள கோவை தற்போது மேலும் ஒரு காரணத்திற்காக பெருமை கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது துணைக் குடியரசுத் தலைவராக இருந்து நமக்கெல்லாம் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். இயற்கை விவசாயம் என் இதயத்திற்கு நெருக்கமானது.


மேடைக்கு வரும் முன் அரங்குகளை பார்த்தேன். இயந்திரவியலில் இருந்து ஒருவர், இஸ்ரோவில் இருந்து ஒருவர் என விவசாயத்திற்கு வந்துள்ளனர். நான் இங்கு வரவில்லை என்றால் பல விஷயங்கள் தெரியாமல் போயிருப்பேன். இங்கு வேளாண் துறையினர், ஸ்டார்ட் அப் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து இருக்கின்றனர்.


விவசாயிகள் கடன் அட்டை மூலம் மட்டுமே இந்த ஆண்டில் மட்டும், ரூ. 10,000 கோடி அளவிலான நன்மைகள் பெற்றிருக்கிறார்கள். 7 ஆண்டுகளுக்கு முன்பாக கால்நடை பராமரிப்பாளர்களுக்கும், மீன் வளர்ப்பாளர்களுக்கும் இந்த விவசாயி கடன் அட்டை பெற்று அவர்களும் நலன் பெற்றுவருகிறார்கள். உயிரி உரங்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைத்தபின் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.


எனக்கு சிறு வயதில் தமிழ் சொல்லித் தரப்பட்டிருந்தால் உங்களுடன் தமிழில் பேசி மகிழ்ந்திருப்பேன். தமிழ்நாட்டில் கடவுள் முருகனுக்கு தேனும், தினைமாவையும் படைக்கின்றோம். நமது சிறந்த சிறுதானிய உணவு உலகம் முழுக்க உள்ள சந்தைகளில் சென்று சேர வேண்டும் என்பதே நமது அரசின் முயற்சி என்று தெரிவித்துள்ளார்.