சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு
சென்னை: பாமக நடத்தக்கூடிய சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்திற்கு தவெகவிற்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாமக சார்பாக வழக்கறிஞர் பாலு, தவெக பொதுச்செயலாளர் ஆனந்திடம் அழைப்பு கடிதம் வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கும் திமுகவை கண்டித்தும் பாமக தரப்பில் டிசம்பர் 17ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்க தவெகவிற்கு அன்புமணி கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தை அன்புமணி சார்பில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்திடம் வழக்கறிஞர் பாலு மற்றும் பாமக கட்சியினர் நேரில் சென்று வழங்கியுள்ளனர்.
இந்த கடிதத்தை தவெக பொதுச்செயலாளர் ஆனந்தும் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து வழக்கறிஞர் பாலு பேசுகையில், தவெக ஆரம்பித்த முதல் மாநாட்டில் இருந்தே சாதிவாரி கணக்கெடுப்பு நடந்த வேண்டும் என்று செல்லக்கூடிய அமைப்பாக இது இருக்கின்றது. திராவிட இயக்கத்திற்கு எல்லாம் இன்றைக்கு பாடம் சொல்லக்கூடிய வகையில் இவருடைய கருத்து அமைந்துள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். திமுகவிற்கு மட்டும் நாங்கள் அழைப்பு விடுக்க வில்லை. காரணம் அவர்கள் எடுக்கக்கூடாது, எடுக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனவே தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிக்கின்றவர்களை எழுப்ப முடியாது. திமுகவை தவிர திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்து இருக்கிறோம். அரசியல் கூட்டணி குறித்து எல்லாம் தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.