ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?

Su.tha Arivalagan
Dec 27, 2025,05:04 PM IST

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசல், தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல மாதங்களாக முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த விவகாரம் நாளுக்கு நாள் உச்சகட்டத்தை எட்டி வருகிறது. 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், பாமக.,வில் முடிவில்லாமல் செல்லும் அப்பா-மகன் மோதல் பாமக.,வின் வாக்கு வங்கியை பதம் பார்க்குமா என்பதை கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாம்.


 பாமக மோதலின் பின்னணி: 


இந்த மோதல் என்பது வெறும் தந்தை-மகன் இடையேயான பிரச்சனை மட்டுமல்ல, அது கட்சியின் எதிர்காலப் பாதை குறித்த மாறுபட்ட கருத்துகளின் வெளிப்பாடாகும். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை ராமதாஸ் விரும்பவில்லை என்றும், அது அன்புமணியின் தனிப்பட்ட முடிவு என்றும் கூறப்படுகிறது. 2026-ல் யாருடன் கூட்டணி என்பதில் இருவருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதை விட முக்கியமாக கட்சி யாருக்கு சொந்தம்? யாருக்கு தொண்டர்களின் பலம் அதிகம்? என்பது மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது.'மாம்பழம்' சின்னம் மற்றும் கட்சியின் பெயர் மீதான உரிமை குறித்து இரு தரப்பும் நீதிமன்றத்தை அணுகியுள்ளன. 


உச்சகட்டத்தை எட்டும் மோதல் :




அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் இருந்தும் நீக்குவதாக சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். அதற்கு பிறகு இரு தரப்பும் மாறி மாறி பொதுக்குழு, செயற்குழுவை நடத்தி போட்டி அறிக்கைகள் வெளியிட்டு வந்தனர். இதன் உச்சகட்டமாக தற்போது பாமக.,வின் கெளர தலைவரான ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கட்சிக்குள் இருக்கும் மோதலை அதிகரிக்க செய்துள்ளது.


வாக்கு வங்கியில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் :


- பாமகவின் பலமே அதன் ஒருமுகப்பட்ட வாக்கு வங்கி தான். இந்த மோதல் தொடர்ந்தால் பாமகவின் முதுகெலும்பாக விளங்கும் வன்னியர் சமுதாய வாக்குகள், "ஐயா" (ராமதாஸ்) மற்றும் "சின்னய்யா" (அன்புமணி) என இரண்டாகப் பிரிந்தால், அது கட்சியின் வெற்றி வாய்ப்பை நேரடியாகப் பாதிக்கும்.

- "மாற்றத்தை விரும்புபவர்களுக்கு ஒரு மாற்று" என்ற கோஷத்துடன் செயல்படும் பாமக, தனக்குள்ளேயே ஒற்றுமை இல்லாமல் இருப்பது நடுநிலை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களிடையே கட்சி மீதான நம்பிக்கையைக் குறைக்கும்.

- மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அடிமட்டத் தொண்டர்கள் யாரிடம் விசுவாசமாக இருப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இது தேர்தல் காலப் பணிகளை முடக்கும்.


மற்ற கட்சிகளுக்குக் கிடைக்கும் சாதகமான சூழல் :


பாமகவின் இந்த உட்கட்சிப் பூசல் மற்ற கட்சிகளுக்கு லாபமாக அமையக்கூடும். வடதமிழகத்தில் பாமகவின் வாக்குகள் குறைந்தால், அது பாரம்பரிய திராவிடக் கட்சிகளுக்குச் சாதகமாக மாறும். நடிகர் விஜய்யின் புதிய கட்சி, பாமகவிலிருந்து விலகும் இளைஞர்களின் வாக்குகளைக் கவர முயற்சி செய்யலாம். மாற்று அரசியலை விரும்பும் வன்னிய இளைஞர்கள் நாம் தமிழர் கட்சி பக்கம் திரும்பவும் வாய்ப்புள்ளது.


தமிழகத்தில் சுமார் 5% முதல் 7% வரை நிலையான வாக்கு வங்கியை வைத்துள்ள பாமக, இந்த மோதலால் பிளவுபட்டால் அதன் செல்வாக்கு சரிவது தவிர்க்க முடியாதது. 2026 தேர்தலுக்கு முன்னதாக ராமதாஸ் - அன்புமணி இடையே ஒரு சுமூகமான சமரசம் ஏற்பட்டால் மட்டுமே பாமக தனது அரசியல் முக்கியத்துவத்தைத் தக்க வைக்க முடியும். இல்லையெனில், 2026 தேர்தல் பாமகவுக்கு ஒரு சவாலான தேர்தலாகவே அமையும்.