அதிமுக கூட்டணியில் பாமக.,வுக்கு எத்தனை சீட் தெரியுமா?
சென்னை : அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பாமக.,விற்கு கூட்டணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது என்பது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக இன்று இணைந்துள்ளது. இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த அன்புமணி, கூட்டணியை உறுதி செய்தார். அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த எடப்பாடி பழனிச்சாமி, பாமக.,விற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என கூறி இருந்தார்.
ஆனால் அதிமுக கூட்டணியில் பாமக.,விற்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும், அதோடு ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக.,விற்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக அதிமுக 120 க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அதிமுக.,விற்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. அதிமுக.,வில் விருப்பமனுக்கள் பெறும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. இந்த மனுக்களை பரிசீலிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. ஜனவரி 11 முதல் 13ம் தேதி வரை தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளவர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது பொங்கலுக்கு முன்பு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை முடித்து விட்டு, ஜனவரி 20ம் தேதிக்குள் கூட்டணியையும் இறுதி செய்யும் பணியையும் முடிக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாம்.
அன்புமணி தரப்பு பாமக.,வை தொடர்ந்து, ராமதாஸ் தரப்பு பாமக.,வையும் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக ராமதாசை சந்தித்து பேச உள்ளார் சி.வி.சண்முகம். மற்றொரு புறம் ஜனவரி 09ம் தேதி நடக்கும் மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் அறிவிக்க உள்ளார். இதனால் ஜனவரி 20ம் தேதிக்குள் கூட்டணியை இறுதி செய்து, அதற்கு பிறகு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மண்டல வாரியாக மாநாடுகள் நடத்தவும் அதிமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.