கையழுத்துப் போட்டுக் கொடுத்த அந்தக் கைகள்.. ஏவிஎம் சரவணன் குறித்து நெகிழ்ந்த வைரமுத்து

Su.tha Arivalagan
Dec 05, 2025,11:07 AM IST
- அ.கோகிலா தேவி

சென்னை: மறைந்த தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

ஏவிஎம் நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான ஏவி.எம். சரவணன் நேற்று  காலாமானார். அவரது மறைவு மிகப் பெரிய சகாப்தத்தின் முடிவாக பார்க்கப்படுகிறது. எத்தனையோ பெரும் பெரும் ஸ்டார்களை உருவாக்கிய நிறுவனத்தை அதன் தொன்மை மாறாமல் கண்ணியம் குறையாமல் காத்து வந்தவர் சரவணன். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் கவிஞர் வைரமுத்துவும் ஒரு சம்பவத்தை நினைவு கூறி இரங்கல் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு:

நேற்றோடு முடிந்துவிட்டது ஏவி.எம்.சரவணன் அவர்களின் பெளதிக வாழ்க்கை

இனி  நினைவின் வெளிகளில்தான் அவரைச் சந்திக்க முடியும்

ஒரு சம்பவம் சொல்கிறேன்:



சிவாஜி படத்திற்குப்
பாட்டெழுதியதற்கு  ஊதியமாக
எனக்கொரு காசோலை கொடுத்தார்

காசோலைகளை நான்
பிரித்துப் பார்ப்பதில்லை;
பெற்றுக்கொண்டு வந்துவிட்டேன்

சில வாரங்களுக்குப் பிறகு
வேறொரு பாட்டுப் பதிவுக்காக
ஏவி.எம் கலைக்கூடத்திற்குள்
நுழைகிறது என் கார்

தன் அறையின்
கண்ணாடி வழியே
என் காரைப் பார்த்த 
சரவணன் அவர்கள்
வீடு திரும்பும்போது
தன்னைப் பார்த்துச் செல்லும்படி
சொல்லியனுப்பினார்; சென்றேன்

கையில் ஓர் உறை வைத்திருந்தார்;
நான் குழப்பமானேன்

அவர் சொன்னார்:

“போனவாரம் சிவாஜிக்கு
வாலி ஒரு பாட்டெழுதினார்.
உங்களுக்குக் கொடுத்த
ஊதியத்தையே
அவருக்கும் கொடுத்தோம்;
அவரோ மேலும் ஒருலட்சம்
வேண்டுமென்று கேட்டார்;
கொடுத்துவிட்டோம்.

அவர் சென்றபிறகு யோசித்தோம்;
வாலியோடு ஒப்பிடுகிறபோது
உங்களுக்குக் குறைத்துக்
கொடுத்திருக்கிறோமே;
அது நீதியில்லையே; ஆகவே
வாலிக்குக் கொடுத்த தொகையை
உங்களுக்கும் கொடுப்பதென்று
முடிவெடுத்தோம்;
அதுதான் இந்தத் தொகை.
இதில் ஒருலட்சம் இருக்கிறது
பெற்றுக்கொள்ளுங்கள்” என்று
எழுந்துநின்று வழங்கினார்

நான் பெற்றுக்கொண்டு
“இரண்டாம் நன்றி உங்களுக்கு;
முதல் நன்றி வாலிக்கு” என்றேன்

‘ஏன்’ என்றார்

“என் சம்பளத்தை
உயர்த்தியவர் அவர்தானே;
வாலி; வாழி” என்றேன்

வாய்விட்டுச் சிரித்தார்

அந்தச் சிரிப்பையும் சேர்த்தல்லவா
நேற்று மின்மயானம் எரித்துவிட்டது

எரி மேடையில்
உடல் கிடத்தப்பட்டிருந்தபோது
காசோலையில் கையொப்பமிட்ட
அவர் கையையே
பார்த்துக்கொண்டிருந்தேன்;
கண்ணில் நீர் முட்டியது என்று எழுதியுள்ளார் வைரமுத்து.

(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)செய்தி விளக்கத்தை உள்ளிடவும்