வாசலிலே பொங்கல் கோலம்.. லட்சுமி கடாட்சம்.. பாரம்பரிய கலைவடிவம்!

Su.tha Arivalagan
Jan 13, 2026,01:41 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


கோலம் என்பது வீட்டின் முன் வாசலில் அழகு சேர்ப்பதுடன் லட்சுமி கடாட்சத்தையும், மங்களத்தையும் கொண்டு வரும் ஒரு பாரம்பரிய   கலை வடிவம். அனைத்து நாட்களிலும் மற்றும் பண்டிகை நாட்களிலும் இடும் கோலங்களை விட பொங்கல் பண்டிகையின் போது இடும் கோலத்திற்கு அதிக சிறப்பு உண்டு.


"தை பிறந்தால் வழி பிறக்கும்"




அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடப்படும் நேரத்தில் புதுப் பானையில் பொங்கல் வைப்பதன் சின்னமாகவும், மங்களகரமான தொடக்கத்திற்காகவும், வீடுகளில்  மற்றும் அனைத்து இடங்களில் பல வண்ணமயமான கோலங்கள் இடப்படுகின்றன.


பொங்கல் கோலம் என்பது போகி பண்டிகையான பழையன கழிதலும், புதியன புகுதலும் எனும் புதிய துவக்கத்தின் அடையாளமாகவும், பொங்கல் திருநாளன்று புது அரிசி, பால், வெல்லம் கொண்டு பொங்கல் வைக்கும் நிகழ்வைக் குறிக்கும் வகையில் பொங்கல் பானை,மயில், நெற்கதிர்கள், பறவைகள், செடிகள்,மரங்கள், சூரியன்,மலர்கள், பறவைகள்,கரும்பு, மஞ்சள் செடி, வெற்றிலை,பாக்கு, தேங்காய்,பல வடிவங்கள், பல டிசைன்களில், பல வண்ணங்கள் கொண்டு விதவிதமாக வீட்டை அலங்கரிக்கும் ஒரு மகிழ்ச்சியான அம்சமாக திகழ்கிறது. 


மாட்டுப் பொங்கல் அன்று வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் வைத்து, அதன் கொம்புகளுக்கு வண்ணம் பூசி,படையல் இட்டு கொண்டாடுவதன் சின்னமாக மாடுகள் வரைந்து இடப்படும்  கோலம்.கோலங்கள் புள்ளிகள் வைத்தும், புள்ளியில்லாத ரங்கோலி டிசைன்களிலும்,அவரவர் கற்பனை திறனுக்கு ஏற்ப அழகின் சின்னமாக வரையப்படுகிறது.


பலவகை கோலங்கள் :




கம்பி கோலம் : பழங்காலம் தொட்டு வரையப்படும் கயிறு போல வளைந்து நெளிந்து, புள்ளிகளை இணைக்காமல் கோடுகளால் மட்டும் வரையப்படுகிறது. பலவண்ண கோடுகளாலும் , பல கோடுகளால் பல டிசைன்களில் இடப்படும் கோலம். இது பெரிய அளவில் அலங்காரமாகவும் இருக்கும்.


புள்ளிக்கோலம் : புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை இணைத்து சுற்றி வரையப்படும் வடிவமே புள்ளிக்கோலம் எனப்படுகிறது. இதில் நேர் புள்ளி,சந்து புள்ளி கோலங்கள் இடப்படுகின்றன. தேர் கோலம், தொட்டில் கோலம் போன்றவை பிரபலமான கோலங்கள்.


சந்து புள்ளி கோலம்: சந்து புள்ளி வைத்து இடப்படும்  சிக்கு கோலம் பல சிக்கலான வடிவங்களை உருவாக்குவதன் மூலம் வரையப்படுகிறது.இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.


நேர் புள்ளி கோலம்: புள்ளிகளை இணைத்து, புள்ளிகளுக்கு இடையே கோடுகள் வரைந்து இடப்படும் கோலம்.

 

நெலிக் கோலம்: பச்சரிசி மாவை தண்ணீரில் கரைத்து ஒரு துணியை  ஈரப்படுத்தி அதன் நுனியில் இருந்து   விழும் மாவு துளிகளைக் கொண்டு, வளைந்து நெளிந்து  இடப்படும் கோலம். லட்சுமி கடாக்ஷம் பொருந்திய கோலம். 

பச்சரிசி மாவினால் கோலம் இடப்படுவதனால் சிறு ஜீவராசிகளுக்கு உணவு அளிப்பதன் மூலம் தர்மம் செய்த பலன் கிடைக்கும். கணித மற்றும் கலை வடிவங்களை வேறுபடுத்தும் திறன் பெருகுகிறது.


இன்றைய நாட்களில் பல வடிவ அச்சுக்கள் வரைந்த சல்லடைகளில் கோலமாவினை பரப்பி, கோலமிட தெரியாதவர்கள் கூட நவீன அச்சுக்களை பயன்படுத்தி கோலமிட்டு வீடுகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில், கிராமங்களில், தோட்டங்களில், அலுவலகங்களில் மற்றும் அனைத்து இடங்களில்  அழகு செய்கின்றனர்.


அழகான பல வண்ண கோலங்களை பார்த்தாலே நமக்கு மனதில் புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும்,நேர்மறை ஆற்றலும் பெருக வழி வகுக்கிறது. அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக பொங்கல் தின நல்வாழ்த்துக்கள். மேலும் இதுபோன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.