நளபாகம் - ஒரு நிமிடக் கதை (49)

Su.tha Arivalagan
Oct 31, 2026,12:37 PM IST

- பூரணவள்ளி சேகர்


மல்லிகா மிகவும் சிறந்த சமையல் கலை நிபுணர்.


மல்லிகாவின் அம்மாவும் அப்பாவும் சிறு உணவகம் நடத்தி வந்தனர். அந்த உணவகத்தின் சிறப்பே அங்கு சமைக்கப்படும் உணவுகளின் சுவைதான். அவர்களின் கைப் பக்குவம்  மல்லிகாவிடமும் இருந்தது.


ஒரு முறை சாப்பிடுபவர்கள் மறுமுறை தேடி வந்து சாப்பிடத் தூண்டும் வகையில் உணவுகள் தரமாக சமைக்கப்படும். மல்லிகாவும் அதே நேர்த்தியில் சமையல் செய்து அசத்தினார்.


மல்லிகாவின் கணவருக்கு சமையல் கலையில் ஆர்வம் இல்லை. சுயமாக ஒரு பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவரின் கவனம் முழுதும் அவரின் கடை மேல் தான் இருந்தது.


மல்லிகா முதலில் சிறிய உணவகம் நடத்தி வந்த நிலையில் சிறிய விசேஷங்களுக்கு சமைத்தும் கொடுத்தாள். 

மல்லிகாவின் உணவின் சுவை நிறைய திருமண ஒப்பந்தங்களைக் கூடப்  பெற்றுத் தந்தது. மல்லிகா மிகவும் பிரபலமான சமையல் கலை நிபுணர் ஆனாள்.




உதவிக்கு அந்த ஊரைச் சேர்ந்த நல்ல உறவினர் சிலரை உடன் வைத்திருந்தாள். சைவம் அசைவம் ஆகிய எல்லாவற்றிலும் பல விதங்களில் சமைத்து அசத்தினாள். மல்லிகாவின் சமையல் என்றாலே நளபாகம் என்று ஊரே பேசியது.


மல்லிகாவின் சமையல் அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் வகையில் சேர்மானங்கள் எல்லாம் சரியான முறையில் இருக்கும். ஒரு நாள் வெளியூரில்  ஒரு திருமண ஒப்பந்தம் முடித்து வீட்டிற்கு வந்த மல்லிகா தன் கணவனுக்குப் பிடித்த பருப்பு உருண்டைக் குழம்பும்  வடையும் செய்து வைத்திருந்தாள்.


மனைவியின் பருப்பு உருண்டைக் குழம்பையும் வடையையும் சாப்பிட்ட கணவன்  காரம் போதவில்லை என்றும் உப்பு இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம் என்றும் குறைகளை அடுக்கினான். 


மனைவியின் சமையல் நளபாகமாகவே இருந்தாலும் குறைகளைக் கூறுபவர் தான் கணவர் என்பது மல்லிகாவிற்குத் தெரியும்.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)