போவோமா.. ஊர் கோலம்.. ஒரு நிமிடக் கதை (29)
- பூரணவள்ளி சேகர்
காலையில் வேலை செய்வதற்கு காலில் சக்கரம் கட்டினாலும் போதாது கைகளில் ரெக்கை கட்டினாலும் போதாது...
அவசரம் அவசரமாக காலை உணவு மதிய உணவு தயாரித்ததுடன் அவசரமாகத் துணியையும் துவைத்துக் கொண்டிருந்தாள் கீதா.
தான் பணிக்குக் கிளம்புவதுடன் தன் மகனையும் சேர்த்துக் கிளப்பிக் கொண்டே தன் மனைவி கீதாவைப் பார்த்து துணிகளை விடுமுறையன்று துவைக்க வேண்டியதுதானே என்று சிரித்துக் கொண்டே கூறினான்.
பள்ளிக்கூடத்துக்கு வேறு நேரமாயிற்றே என்ற அவசரத்துடன் தன் கணவனின் கருத்தைப் புறக்கணித்தாள் கீதா. தன் கணவனை அனுப்பிவிட்டு தானும் கிளம்பி தன் மகனுடன் அவசரமாகப் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தாள் கீதா.
அவள் உள்ளே நுழையும் போது காலை இறைவணக்கத்திற்கான மணி ஒலித்தது.
முதல் வகுப்பு படிக்கும் தன் மகனை முதல் வகுப்பில் ஆசிரியரிடம் வேகமாக ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக மூச்சு விட்டபடி தன் அலைபேசியை எடுத்துத் தன் தோழி பூமாவை அழைத்தாள்.
கீதாவின் அழைப்பை ஏற்ற பூமா தான் தயாராக பேருந்து நிலையத்தில் நிற்பதாகக் கூறினாள். இருவரும் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்குச் சென்று பக்கத்து மாவட்டத்திலுள்ள மாரியம்மன் கோயிலுக்குச் செல்லப் பேருந்து ஏறினர்.
இப்போதுதான் எல்லாப் பேருந்துகளும் இலவசம் தானே அதனால் சீக்கிரம் இலவசப் பேருந்திற்காகக் காத்திருக்க வேண்டாம். எனவே விரைவில் வீடு திரும்பிவிடலாம் என்று பேசிக்கொண்டே பயணம் செய்தனர்.
செல்லும் போதே மறுநாள் எந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்றும் திட்டமிட்டனர்.
தினமும் இருவரும் ஊர் கோலம் போகலாமே.....!
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)