புரட்டாசி விரதம்.. ஒரு நிமிடக் கதை (24)

Su.tha Arivalagan
Oct 01, 2026,11:08 AM IST

- பூரணவள்ளி சேகர்


சரவணனும் மீனாட்சியும் இறைபக்தி நிரம்பியவர்கள்.  ஒவ்வொரு நாளும் குளித்து முடித்து பூஜைகள் செய்வது பழக்கம். விரத நாட்களில் இறைவனுக்கு பூஜைகள் முடித்த பிறகுதான் சமையலே செய்ய ஆரம்பிப்பாள் மீனாட்சி.


ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் செய்வது இருவருக்கும் பழக்கமாக இருந்தது. புரட்டாசி மாதத்தில்  தினமும் பூஜை புனஸ்காரம்தான். அவர்கள் அசைவ உணவுகளை உண்பதில்லை என்பதால் உணவுப் பிரச்சினை இல்லை. ஆனால் வெளியில் உணவகங்களில் சாப்பிடுவதை இந்த மாதத்தில் தவிர்த்து விடுவார்கள்.


புரட்டாசி மாதத்தில் ஒரு நாளாவது ரங்கநாதரைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று இருவரும் கிளம்பினார்கள்.

மதிய உணவிற்குப்பின் கிளம்பிச் சென்றால் தரிசனம் முடித்து இரவு உணவிற்கு வீட்டிற்குத் திரும்பி விடலாம் என்று திட்டமிட்டுக் கிளம்பினர்.


ரங்கநாதரைத் தரிசித்துவிட்டு வெளியில் வருவதற்கு  நெடுநேரம் ஆகிவிட்டது. சரவணன் மீனாட்சி இருவருக்கும் பசி வந்துவிட்டது. சர்க்கரை நோய் இருப்பதால் இருப்பதால் குறித்த நேரத்தில் உணவு  சாப்பிடாத தால் உடல் பலவீனமான இருப்பதை இருவரும் உணர்ந்தனர். 




அங்கே பெரிய பெரிய ஓட்டல்கள் இருந்தன. அங்கே சாப்பிடும் அளவிற்கு வசதியும் இல்லை. வெளியில் சாப்பிட மனதும் இல்லை. எப்படியாவது  வீட்டிற்குச் சென்று விடலாம் என்று பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்து வந்தனர். 

அவர்கள் கிராமத்திற்குச் செல்லும் கடைசி பேருந்து கிளம்பிச் சென்று விட்டது.


மழை வேறு தூறிக் கொண்டிருந்தது. இன்று இரவு இங்கேயே தங்க வேண்டியதுதான் என்று முடிவெடுத்தனர்.


பசி வயிற்றைக் கிள்ளியது.  பெருமாள்  ஏதாவது ஒரு வழியில் உதவுவார் என்று நம்பினர். பின் ஆபத்திற்குப் பாவமில்லை எனவே இருவரும் இட்லி வாங்கிச் சாப்பிடலாம் என்று நினைத்தனர்.


தூரத்தில் ஒரு சிறிய கடை தென்பட்டது.  மன சஞ்சலத்துடன் அங்கே சாப்பிடச் சென்றனர்.  இருவரும் தங்களின் விரதம் பங்கமானதாக  எண்ணி பெருமாளை நினைத்து வணங்கி இரண்டு இட்லி மட்டும் வாங்கினர். சாப்பிட மனமில்லாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.


அவர்களுக்கு எதிர் திசையில் வந்த வாகனத்தின் ஒளியில் கடையின் பெயர்ப் பலகை ஒளிர்ந்தது.


"ஸ்ரீவாரி உணவகம் '


இருவரும் புரட்டாசி விரதம் கெட்டுப் போகவில்லை என்றும்  பெருமாளே உணவு வழங்கியதாகவும்  மனதில் ஆறுதலடைந்தனர்.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)