தியாகம்.. ஒரு நிமிடக் கதை .. (54)

Su.tha Arivalagan
Nov 10, 2026,10:56 AM IST

- "ஒரு நிமிடக் கதை அரசி" பூரணவள்ளி சேகர்


தன் அம்மாவைத் தன் அண்ணன் கவனிக்காமல் விரட்டி விட்டான் என்று அறிந்த கமலி மிகவும் துடித்துப் போனாள். தன் அம்மாவை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கணவனிடம் கவலையுடன் கூறினாள். கமலியின் கணவன் விக்னேஷ் அவளுக்கு ஆறுதல் கூறினான். 


கமலியின் அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.  கிடைத்த வருமானத்தில் கமலியையும் அவளின் அண்ணன் சுரேஷையும் நன்கு படிக்க வைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்த தன் அம்மா பற்றி கமலி தன் கணவனிடம் பலமுறை கூறுவாள்.


தன் அம்மா மிகவும் திறமைசாலி. சிக்கனமானவள். வீட்டில் வரும் பணப் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்கும் பொறுமைசாலி. என் அம்மா எங்களுக்காக நிறைய தியாகங்கள் செய்துள்ளார் என்று அழுதுகொண்டே கூறினாள் கமலி.


விக்னேஷ் கமலியை அமைதியாக இருக்கும்படி ஆசுவாசப் படுத்தினான். மேலும் கமலியின் அம்மாவை நாமே பார்த்துக் கொள்ளலாம் என்று கூறித் தேற்றினான்.




விக்னேஷ் இன்று அரசாங்கத்தில் ஒரு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறான். விக்னேஷின் அப்பா சிறு வயதிலேயே இறந்து விட்டார். அவரின் வாரிசு வேலையாக விக்னேஷின் அம்மா ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றினாள்.


விக்னேஷின் அம்மா திலகா தான் ஒருத்தியாகத் தன் மகனை நல்ல பண்புகளுடன் வளர்த்து இன்று ஒரு அரசாங்க அதிகாரியாக பணிபுரிய முழுமையாகத் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்து இருந்தாள்.


திருமணம் முடித்து வந்த உடன் திலகாவுடன் கோபித்துக் கொண்டு தனிக் குடித்தனம் செல்ல வேண்டும் என்று அடம் பிடித்து விக்னேஷைத் திலகாவிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றாள் கமலி.


ஒரே ஊரில் இருந்தாலும் திலகாவை விக்னேஷ் சென்று பார்க்கக் கூடாது என்பது கமலியின்  கட்டளை. திலகா தன் மகன் நன்றாக இருந்தால் அதுவே போதும் என்று தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள்.


கமலி மேல் கொண்ட அன்பால் கமலியின் பாட்டிற்குத் தாளம் போட்டுக் கொண்டு இருந்தான் விக்னேஷ். கமலியின் அம்மா மகளிடம் வந்து சேர்ந்தாள்.


கமலியின் தாயாரின் தியாகத்தை  நினைவுபடுத்திப் பார்த்த கமலிக்கும் விக்னேஷுக்கும் திலகாவின் தியாகம் தெரியாமலே போனது.


ஒருவரின் கடந்த கால வாழ்வை நினைக்க பெண் பிள்ளைகளை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டுமா?????


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)