பண்டிகை.. ஒரு நிமிடக் கதை (53)

Nov 09, 2026,11:05 AM IST
- "ஒரு நிமிடக் கதை அரசி" பூரணவள்ளி சேகர்

எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த தீபாவளிப் பண்டிகை வந்துவிட்டது.

வகை வகையான உணவுப் பண்டங்களாக இட்டலி, பணியாரம், பருப்பு வடை, உளுந்து வடை, அப்பம் மற்றும் பல வகையான கறிக் குழம்புகளைத் தன் பிள்ளைகள் இருவருக்கும் பரிமாறினாள் வனஜா.

ரவியும் ராஜாவும் மிகவும் மகிழ்வுடன் சாப்பிட்டு முடித்தார்கள். இத்தனை வகைப் பண்டங்களை ஒரே நேரத்தில் சாப்பிடுவதால் ஏற்பட்ட மகிழ்வுடன் அவற்றின் சுவையும் சேர்த்து கொண்டது.





அம்மா கொடுத்த பட்டாசுகளை வெடிக்கத் தயாரானார்கள் இருவரும். மாலை நேரத்தில் வெடிகளை வைக்கலாம் என்று வனஜா கண்டிப்பாகக் கூறினாள். சரி என்று ஒப்புக்கொண்ட இருவரும் அப்படியே வெளியில் சென்றனர்.

தெருவில் வெடிக்காமல் பாதியில் திரியில்லாமல் கிடக்கும் வெடிகளைச் சேகரித்து வந்து அவற்றைப் பிரித்து ஒரு பேப்பரில் கொட்டி  நெருப்பு வைத்தனர். அந்த வெடிமருந்துகள் சிதறுவதைக் கண்டு ரசித்தனர்.

மாலை நேரத்தில் அம்மா கொடுத்த வெடிகளை வெடித்து மகிழ்ந்தனர். வனஜா தன் இரு மகன்களுடன் போராடி வாழ்ந்து கொண்டிருந்தாள்.

வனஜா தன் வீட்டில் சமைத்திருந்தால் கூட இத்தனை வகை வகையான உணவுகள் இருவருக்கும் கிடைத்திருக்காது. வனஜா  வீட்டு வேலை செய்யும் வீடுகளில் கொடுத்த பலகாரங்கள் வயிற்றை நிரப்பின.

வனஜா வாழ்கிற குப்பத்திற்கு வந்த ஒரு யூடியூப் பிரபலம் ஒருவர் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் சிலவற்றைக் கொடுத்துச் சென்றார். புத்தாடை,  வகை வகையான உணவுகள் மற்றும் பட்டாசுகளுடன் ரவியும் ராஜாவும் தீபாவளியைக் கொண்டாடினர்.

இரவு நேரத்தில் வெட்டவெளியில் நின்று வானத்தைப் பார்த்தனர். வானில் பல வாணவேடிக்கைகள் ஜாலம் காட்டின.
வெடிகளின் சப்தம் காதைப் பிளந்தன.

தீபாவளிப் பண்டிகை  இந்த ஆண்டு தன் வாழ்நாளை முடித்துக் கொண்டது.

(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்