வளரும் பிள்ளை நல்லா தாராளமா தைங்க.. தீபாவளி நினைவுகளில் சில!

Nov 08, 2026,03:00 PM IST

- "ஒரு நிமிடக் கதையரசி" பூரணவள்ளி சேகர்


தீபாவளிப் பண்டிகை.. நம் தீபாவளி நினைவுகளில் சில....


தீபாவளிக்கு முந்தைய சம்பளம் வந்த உடன் அல்லது ஆயுதபூஜை கொண்டாடும் போதே தீபாவளி போனஸ் கிடைத்துவிடும். 


தீபாவளிக்கு புதுத்துணி யாக அணிவதற்கு முன்பாகவே பல முறை என் புது டிரெஸ் என்று அனைவரிடமும் எடுத்துக் காட்டும் சாக்கில் தினமும் ஒரு முறை புதுத்துணியை ஸ்பரிசித்துப் பார்த்துப் பார்ப்பதே ஒரு இன்பம்.


துணி எடுத்துத் தைப்பதாக இருந்தால் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் யூனிஃபார்ம் போல ஒரே துணி பல சைஸ்களில் தைக்கக் கொடுக்கப்படும்.


வளரும் பிள்ளை நல்லா தாராளமா தைங்க என்று தையல்காரருக்கு ஆலோசனை கூறப்படும்.




தீபாவளி டிரெஸில் பள்ளிக்கூட யூனிஃபார்மும் சேர்க்கப்படும். பல பேருக்கு யூனிஃபார்ம் மட்டுமே தீபாவளி டிரெஸாகும்.


ஒரு மாதத்திற்கு வெடிச் சத்தம் காதுகளைப் பிளக்கும். லட்சுமி வெடி மற்றும் அணுகுண்டு ஆகிய வெடிகளே மிகப் பெரிய வெடிகளாகக் கொண்டாடப்படும்.


தீபாவளியன்று விடிய விடிய விழித்திருப்பது வாடிக்கை. எப்போது விடியும் என்று எதிர்பார்க்கப்படும்.


புதுத்துணி அன்று முழுதும் அணியப்படும். மறுபடியும் பள்ளிக்கூடத்திற்கும் அணியப்படும்.


பிஜிலி வெடி பிரதானமாக இருக்கும். கேப் , ரோல் கேப், பாம்பு மாத்திரை , கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், தரைச் சக்கரம்  ராக்கெட் இவற்றுடன் புஸ்வாணம் இவையெல்லாம் நம் தீபாவளியைச் சிறப்பாக்கின.


இட்டிலியும்  உளுந்து,  பருப்பு வடையுடன் விதவிதமான கறிக்குழம்பும்  கிரேவியும் வயிற்றை நிரப்பின. அதிக பட்சம் முறுக்கு அதிரசம் குளாப்ஜாமூன் செய்து தரப்படும்.


ஒரு முறை தீபாவளிக்கு எடுத்த புதுத்துணி அடுத்த தீபாவளி வரை புதுத்துணியாகப் போற்றப்படும்.


அடுத்து வரும் திருமணம் நல்ல நாளில் தீபாவளி டிரெஸே அணியப்படும்.


தீபாவளி வருவதற்கு ஒரு மாதம் முன்பிருந்தும் முடிந்து பல மாதங்களுக்கும் தீபாவளி நினைவுகள் பகிரப்படும்.


ஆண்டுகள் கடந்தாலும் தீபாவளி நினைவுகளை மெமரியில் காட்டுவதற்கு ஆண்டிராய்டு ஃபோன்கள் தேவைப்பட்டதில்லை.


நினைவுக் குறிப்பில் இருந்து வந்து விழுந்த சிறு துளிகள் இவை. மேலும் உங்கள் நினைவகத்தில் இருப்பனவற்றைப் பின்னூட்டமாக இடுங்கள் நண்பர்களே....


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்