Returns of the Day: பிறந்த நாள் வாழ்த்து ஜாக்கிரதை!

Nov 09, 2026,11:25 AM IST
- ராஜஸ்ரீ

எனது பிறந்த நாளன்று நண்பன் ஒருவன் போன் செய்து மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே  என்றான்.

நானும்  தேங்க்ஸ்  என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டேன். பிறகு ஒரு  நிமிடம்  கழித்து அவன் மறுபடியும் போன் செய்து அதே மாதிரி கூறி  வாழ்த்து தெரிவித்தான். 

நானும் அதே மாதிரி கூறி நன்றி தெரிவித்தேன். மறுபடியும் போன் செய்து ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே என்றான்.

நான் எதற்காக இவ்வாறு செய்கிறான் என்று நினைத்தேன். பிறகு  சரி, நன்றி தெரிவித்து விடுவோம் என்று அவனுக்கு நன்றி கூறி போனை வைத்துவிட்டேன்.

மறுபடியும் அவன் போன் செய்து ரிடர்ன்ஸ் ஆஃப் த டே  என்றான்.



எனக்கு பொறுக்கவில்லை. உடனே அவனிடம்  ஏன்டா தொடர்ந்து வாழ்த்து சொல்கிறாயே, என் மீது பாசமா? என்று கேட்க அவனோ, அதெல்லாம்  இல்லை என்றான்.

உடனே நான்  அப்படியென்றால் ஏன்  நான்கு முறை சொன்னாய்? அதுவுமில்லாமல் மெனிமோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே என்பது சுருங்கி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே என்று ஆகிவிட்டதே என்றேன்.

அதற்கு  அவன் எல்லாவற்றிலும் ரிடர்ன்ஸ் என்ற வார்த்தை வந்ததே அதன் அர்த்தம்  என்ன தெரியுமா? என்று கேட்டான்.

நான்  தெரியாதே என்றேன்.

உடனே அவன் என்கிட்ட நீ 50,000 ரூபாய் கடன் வாங்கினாயே, அதை எப்ப ரிடர்ன்  பண்ணப் போகிறாய்? என்பதைத்தான் வாழ்த்து சொல்வதுபோல் நாசூக்காக கேட்டேன் என்றான்.

நான் திடுக்கிட்டேன்.

ஓ.. மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே  என்பதற்கு இப்படி ஒரு  அர்த்தம்   இருக்கிறதோ என்று நினைத்தேன்.

சரி, பிறந்த நாள் அதுவுமா அவனிடம் சண்டை போட வேண்டாம் என்று நினைத்து இந்த மாதம் பென்ஷன் வாங்கியதும் தந்து விடுகிறேன்  என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன்.

நண்பர்களே, நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால் அவர் உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் பொழுது உஷாராக இருங்கள்.

தமிழில் சொன்னால் தப்பித்தீர்கள். ஆங்கிலத்தில் சொன்னால் மாட்டிக்கொள்வீர்கள்!

(ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன் சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்