வாய்ச்சொல் வீரன் (ஒரு நிமிடக் கதை -22)

Su.tha Arivalagan
Sep 29, 2026,10:41 AM IST

- பூரணவள்ளி சேகர்


கண்ணன் படிப்பறிவு குறைவாக  இருந்தாலும் பட்டறிவு மிகுந்தவர். அனைவரிடமும் அவரவர்க்கேற்றார் போலப் பேசி எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் தீர்த்து விடுவதில் வல்லவர்.


வெளியில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பவராக இருந்தாலும் வீட்டில் வரும் பிரச்சினைகளுக்கு  கண்ணனின் மனைவி கவிதாதான்  நீதிபதி. கவிதாவின் பேச்சிற்கு மறு பேச்சு கிடையாது.




அந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவில் ஊரில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன்  திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. விழா நிகழ்வுகள்  அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.


விழாவில் ஏறுதழுவுதலில் முதல் பரிசு பெற்ற கந்தனுக்குப் பரிசு வழங்க கண்ணன் அழைக்கப்பட்டார். கந்தனைப் பாராட்டிப் பேசிய கண்ணன் கந்தனின் பெற்றோர் கொடுத்த ஊக்கம் பாராட்டுக்குரியது என்று பேசினார் 


மேலும் பெற்றோரின் அன்பு அளப்பரியது. அதனை உணர்ந்து அனைவரும் பெற்றோரைக் கொண்டாட வேண்டும் என்று அனைவருக்கும் அறிவுரை கூறினார். இந்த நிகழ்வுகளை  சற்று  தள்ளி இருந்த ஊரில் இருந்த முதியோர் இல்லத்தில் இருந்த கண்ணனின் தாய் கமலா பார்த்துக் கொண்டிருந்தாள்.


தன் மகனின் பேச்சு கமலாவை நெகிழச் செய்தது  . தன் மகனின் பேச்சு பற்றி வெள்ளந்தியாக அனைவரிடமும் புகழ்ந்து  கூறிக்  கொண்டிருந்தாள்  கமலா.


பெற்றவளல்லவா????


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)