இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)

Sep 26, 2026,01:47 PM IST

- பூரணவள்ளி சேகர்


கமலா தன் அருகில் உள்ள சில பேருடன் சேர்ந்து இரயிலில்  திருப்பதிக்குப் பயணம் செய்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் ஒவ்வொருவர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர்.


இரயிலில் ஏறிய சிறிது நேரத்தில் பக்கத்திலுள்ளவர்களிடம் சினேகமாகப் பேசிக் கொண்டிருந்தனர். முதல்முறையாக இரயில் பயணம் செய்யும் கமலா இந்த நிகழ்வை மனதினுள் வாங்கினாள்.


இரயில் முன்னேறிச் சென்று கொண்டிருந்தது. கமலாவின் நினைவுகள் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தது.


கமலா பிறந்தவுடன் தாயை இழந்தாள். பத்து வயதில் தந்தையை இழந்தாள். பாட்டியின் வளர்ப்பில் பத்தாவது முடியப் படித்தாள். இளவயதிலேயே கந்தனுக்குத்  திருமணம் முடித்து வைத்தாள் பாட்டி. திருமணம் முடித்த ஓராண்டில்

தன் கடமை முடிந்ததென்று பாட்டியும் கண்ணை மூடினாள்.




இரு குழந்தைகள் பிறந்தபின் தன் தீய பழக்கங்களால் ஏற்பட்ட கடன் சுமையால் ஊரைவிட்டு ஓடிவிட்டார் கந்தன். தன் உழைப்பால் தன் இரு மகன்களையும் ஓரளவு படிக்க வைத்துத் திருமணம் செய்து வைத்தாள் கமலா. திருமணம் முடிந்த மகன்கள் தன் குடும்பத்தை கவனித்துக் கொண்டு கமலாவை ஒதுக்கினர்.


தற்போது கமலா தனி ஆளாய் சுழன்றாள். தற்போது இரயிலில் பயணிகள் ஏறுவது  போல தன் வாழ்வில் ஒவ்வொரு உறவும் வந்தனர். அவரவர் நிறுத்தம் வந்ததும் இறங்கிச் செல்வது போலப் பிரிந்து சென்றனர். 


ஒவ்வொருவர் வாழ்க்கையும் இரயில் பயணிகளின் சினேகம் போல உள்ளதை நினைத்து மனதைத் தேற்றினாள் கமலா..


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்