- மடிப்பாக்கம் பிரபாவதி
காலை வாசல் தெளிப்பது முதல் இரவு எல்லோருக்கும் பாய் விரிப்பது வரை நேர்ந்து விட்டாற்போல் செய்வாள் வனஜா. மாதவனின் தங்கை. வயதான அம்மா ராஜம் உடம்பு முடியாதவள். வனஜா தனக்கு நேர்ந்ததை எண்ணிப் பார்க்கக் கூட நேரமில்லாதவள்.
எப்போதுமே சுகவாசியாய் இருக்கும் சுமதி. பசையுள்ள வீட்டிலிருந்து வந்தவள். வரும்போதே வனஜா இருப்பதைத் தெரிந்து கொண்டாள். இருந்துவிட்டுப் போகட்டும். வீட்டிற்கு சம்பளம் இல்லாத வேலைக்காரி என்றுதான் நினைத்தாள். அதட்டிக் கேட்க ஆளில்லை. மாதவன் பொட்டிப் பாம்பாய் அடங்கி இருப்பான். மனைவியின் அழகில் மயங்கியவன். தங்கையைப் பற்றி சிந்திக்க மாட்டான். எல்லோரிடமும் அவள் தலையெழுத்து, யார் என்ன பண்ண முடியும் என்பான்.
ராஜம்தான் மிகவும் வருத்தப்பட்டாள். எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் ஆகாதவளாக போய்விட்டாளே என்று கொஞ்சம் கொஞ்சமாக பலகீனமானாள். மொத்தமாக வீட்டு வேலைகள் அனைத்தும் வனஜாவின் தலையில் தான்.

வனஜாவைப் பற்றி சொல்ல வேண்டுமானால் பதினெட்டு வயசுல கல்யாணம். பத்தொன்பதுல கணவர் விபத்தில் இறந்துவிட விதவையானாள். ஆயிற்று இப்போது இருபத்தி மூன்று வயது. வீட்டுக்கு வந்து ஐந்து வருடமாகிறது.
கடந்த மூன்று வருடமாக சுமதிக்கும் சேர்த்து சிசுருஷைப் பண்ணிக் கொண்டிருக்கிறாள். பெரிய வித்தியாசமாக தெரியவில்லை. நடுவில் ஒரு வருடம் ஒரு புதுமையான வாழ்க்கை. அதன்பின் இப்போது வரை ஒரு யோகி வாழ்க்கை வாழ்கிறாள். விருப்பு வெறுப்பு இல்லாத பற்றில்லாத வாழ்க்கை.
மாதவனின் பள்ளிப் பருவத்து நண்பன் பரசு வெளிநாட்டிலிருந்து வந்திருந்தான். இருவரும் பள்ளிப்படிப்பு முழுவதும் ஒன்றாகப் படித்தவர்கள். ஊருக்கு வந்ததுமே மாதவனை வந்து பார்த்தான். மாதவன் திருமணத்திற்கும், வனஜா திருமணத்திற்கும் பரிசுகள் வாங்கி வந்திருந்தான். வந்த இடத்தில் வனஜாவின் நிலைமையைக் கண்டு துடித்துப் போனான்.
"இவ்ளோ நடந்திருக்கு. எனக்குச் சொல்லனும்னு தோணலை இல்ல ஒனக்கு" குமுறினான் பரசு.
வனஜாவின் நிலைமையால் படுத்தப் படுக்கையான ராஜத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். எப்பேர்ப்பட்ட மனுஷி. தனி மனுஷியாய் இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கியவள். நல்ல சுறுசுறுப்பாய் இயங்கும் பெண்மணி. மிகவும் அன்பானவள்.
"வனஜா உன்னைப் பாக்கவே கஷ்டமாயிருக்கு. கடவுள் ஏன் இப்படிப் பண்ணினான்? கடவுளுக்கு இரக்கமே இல்லியா" என்றான்.
வனஜாவின் கண்கள் குளமானது. "என்ன பண்ண முடியும். எல்லாம் நடந்து முடிஞ்சாச்சு. அதப்பத்தி பேசி என்ன ஆகப்போகுது? விடுங்க" என்றாள்.
வனஜாவிடம் பரசு பேசுவதை சுமதி விரும்பவில்லை. "ஊர் நாலு விதமாய் பேசும். போதும் கைய ஆட்டிக்கிட்டு பேசறதெல்லாம். சிரிப்பு வேற. உள்ள போடி" என்று அதட்டினாள். பரசுவுக்கு என்னவோ போலானது. இவள் என்ன இப்படி இருக்கிறாள்? என்று நினைத்தான்.
அந்த வார இறுதியில் ஒருநாள் காலை வனஜாவைக் காணவில்லை. அதுவும் அந்த வீட்டில் யாருக்கும் தெரியவில்லை.
வாசல் தெளிக்கவில்லை. டிகாஷன் போட்டு, பால் காய்ச்சி காப்பி போடவில்லை. கண்விழித்து எழுந்த மாதவன் வெளியில் வந்தான். வீடு திறந்திருந்தது. வாசல் தெளிக்கவில்லை. எந்த சத்தத்தையும் காணும். "வனஜா, வனஜா எங்க போன? இன்னும் எழுந்திருக்கலையா?" என்று குரல் கொடுத்தான்.
"வனஜா இங்க இருக்கா" என்ற குரல் வந்த திசையில் பார்த்த மாதவன் அதிர்ந்தான். பரசுவும் வனஜாவும் மாலையும் கழுத்துமாய் வாசலில்! பட்டுப் புடவையும் புதுத் தாலியும் மின்ன சுமங்கலியாய் வனஜா!
மெல்ல எழுந்து வெளியில் வந்த சுமதி அதிர்ந்தாள். பணம் கேட்காத பர்மனன்ட் வேலைக்காரி இப்போது பரசுவின் மனைவி. விரைவில் வெளிநாடு சென்று விடுவாள். தன் நிலைமை?
"என்னக் கோலம்டி இது? அவமானம். அத்தை இங்கப் பாருங்க ஒங்கப் பெண்ணோட இலட்சணத்தை" என்றாள் சுமதி.
மெல்ல எழுந்து வந்த ராஜம் வனஜாவைப் பார்த்ததும் கையை உயர்த்தி ஆசிர்வதித்தாள். உள்ளே அழைக்கவில்லை. அப்படியே போகச் சொல்லி சைகை காட்டினாள். தன் மகளை நினைத்து மகிழ்ந்ததைப் பெரிதாகக் காட்டிக் கொள்ளாமல் கட்டிலில் வந்து படுத்தாள். மாதவனுக்கும் உள்ளூர மகிழ்ச்சிதான். காட்டிக் கொள்ளவில்லை.
சுமதிக்குதான் தலையில் இடி இறங்கினாற்போலானது.
(எழுத்தாளர் பிரபாவதி, சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். பேக்கிடெர்ம் டேல்ஸ் (publishers) மூலம் ஏனையோருடன் சேர்ந்து 42 புத்தகங்களில் எழுதியிருக்கிறார். ராணி, விகடகவி, மலர்வனம், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், இறகுகள், தமிழ்நாடு இ பேப்பர், மின் கைத்தடி உள்ளிட்டவற்றில் இருபத்தி ஐந்துக்கும் மேல் சிறுகதைகள் எழுதியுள்ளார். தனது மகளுடன் இணைந்து ஒரே கதையை ஆளுக்கொரு அத்தியாயமாக எழுதி 2 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். சின்னஞ்சிறு கதைகள் என்ற சிறுகதை தொகுப்பும், Boomer to GenZ அலப்பறைகள் என்ற 35 பகுதிகள் அடங்கிய நாவலும் எழுதியுள்ளார்.)
யோகம்!
பொன்னான நாளாகப் பூத்ததோ?
நவம்பர் 13ல் உருவாகிறது தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
ரூ.400 கோடி லஞ்ச வழக்கு : திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி
இரும்புக்கரம் கொண்டு அடக்குவாரா விஜய்? இனியும் சுதாரிக்காவிட்டால் தவெக அரசுக்கு சிக்கல்!
"ஓ... மேடமுக்கு கோபம் வந்திருச்சா".. அழாதே அனாமிகா (2)
கந்தசஷ்டி விரதம் எப்படித் தோன்றியது தெரியுமா?
பெண் ஆட்சியருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினேனா?: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுப்பு
சமையல் With ஸ்வர்ணா: காரசாரமான கத்தரிக்காய் தக்காளி சட்னி!
{{comments.comment}}