Short Story: தரிசனம்!

Nov 09, 2026,05:08 PM IST

- மடிப்பாக்கம் பிரபாவதி


வெளியில் சென்று விட்டு ஆட்டோவிலிருந்து இறங்கி நடந்து உள்ளே வந்து காலணி கழட்டி, பூட்டை சாவி எடுத்து நுழைத்து திறந்து,  கதவை உள்ளே நகர்த்தும் போது பின்னால் யாரோ வருவது போல், சட்டென்று திரும்ப பயம்.  இருந்தாலும் பயம் மீறி இனம் புரியா உணர்வில் உறைந்தது போல் உணர்ந்தேன்.


மெல்ல கால் நுழைத்து, மின்விளக்கு தட்டி, கைப்பைகள் கிடத்தி,  வலது கழுத்து சாய்த்து மெல்ல திரும்பினேன்.


கையில் வேலொடு கருணை சிவபாலன்! அத்த்த்த்தனை அழகாய், மை வெளிநீட்டி தீட்டிய கண்களில் கருணை ஒளி, கூர்நாசியின் மிளிர்ச்சி, கோவைச் செவ்வாயின் சாயம் தீட்டா அழகு, அதன் புன்னகை,  புன்னகையால் விரிந்த உதட்டுக்குள் முத்துக்களை வரிசையாக முத்து முத்தாக கோர்த்து கட்டிய பல்வரிசை, (எந்த பேஸ்ட் தேய்ப்பார் தெரியல, வெள்ளை வெளேர் பற்கள்) கற்கள் பதித்த குண்டலம் தாங்கிய காதுகள், சற்று துளி நிமிர்ந்தேன், கண்ணைப் பறிக்கும் கற்கள் பதித்த கிரீடத்தின் அழகு,  அதற்கேற்றாற்போல் கழுத்துவரை வழிந்த தலைமுடி.


கொஞ்சம் கண்கள் கீழே மெல்ல பார்க்க துடித்தது.  மனம் கேட்க வில்லை. மூளை ஆசைப்பட்டது முழுவதும் ரசிக்க.  மனம் ஒப்பவில்லை.   




கண்களின் கருணையில் நனை.  வாய்மொழி கேள். எத்தனை நிமிடங்கள் கிடைக்கும் தெரியாதென்றது. ஆம் என்று ஆமோதித்தன கண்கள்.


ஆம். கதிர்வேலன் தான். ஆட்டோவில் அவன் சிந்தனையோடு நான் வரும் போதே உடன் ஏறியதாக மொழிந்தான்.


என்னைப்பிடிக்கும் என்றும், என் நைவேத்தியங்கள் நன்றாக இருந்ததென்றும், இன்னும் என்னென்ன்ன்ன்னவோ சொல்ல சொல்ல அதரங்கள் ரசித்தேன். தேன்குழைத்து வீணையின் நாதம் கரைத்து முத்தமிழ் கலந்து அவன் குரலின் இனிமை வள்ளி தெய்வானையை சற்று பொறாமையாக நினைத்தேன். 


என்னை பேசவிடாமல் தான் ஏதோ சொல்லிக்கொண்டிருக்க, சட்டென்று நினைவு வந்தவளாய் வெள்ளிக் குவளையில் பருக பானகம் தந்தேன்.  பின் வாய்திறந்து தைரியம் வரவழைத்து மனத்துடிப்பு சற்று குறைத்து, தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, புரிந்தோ, புரியாமலோ நான் செய்த பிழை பொறுத்தருள வேண்டினேன்.


இப்பிறவியில் செய்த தவறென்று இருந்தால் இன்றே தண்டியும், இனி ஒரு பிறவி வேண்டாம் என்றேன்.


இங்கிருந்து என்னை பாய்கேளாது, படுக்காது, மருத்துவம் பார்க்காது, மற்றவர் மனது நோகாது மெல்லக்கூட்டிச்செல் என்று ஒரு வழியாகச் சொல்லிவிட்டேன். 


மெல்ல நகைத்தான். சட்டென குனிந்தேன். அபயஹத்தங்களும், இடுப்பும் வயிறும் வரை நீண்ட கழுத்தணிகளும், ஊதா அங்கவஸ்திரம் தோள் போர்த்தியிருக்க, மஞ்சள் பஞ்சகக்ஷம் கொலுசுவரை தழைந்திருக்க,  ஒட்டியானத்துடன் கூடி தொங்கும் நீள சங்கிலிகளும் அப்ப்ப்ப்ப்பா அத்தனை அழகையும் அள்ளிப்பருகி அடியில் பணிந்தேன். 


பத்மபாதங்கள்! இரண்டு மூன்று தினுசு கொலுசுகள்!!!

பணிந்து பற்றினேன் பாதங்களை  


முதுமை வந்ததும்தான் எழுதும் பாக்கியம் கிடைத்துள்ளது. மரத்த விரல்களுக்கு மறுவாழ்வு தந்து விடு. இருக்கும் வரை எழுதுகிறேன்.எண்ணங்களை எழுத்தாக்கி எளியேனும் இன்புறச்செய் என்று மட்டும் வேண்டினேன்.


எனக்கது போதும். ஐம்புலனும் இப்போது போல் வேலை செய்தல் வேண்டும்,  வேறொன்றும் தோன்றாது வேண்டிடவே என்றே சொல்லி மெல்லெழுந்தேன்.


அதே புன்னகை.  என் கண்களை விட்டு மெல்ல மறையக்கண்டேன். 


யாரிடம் உறைப்பேன் அழகனைக் கண்டதை? யார் நம்புவார்கள்?


யார் நம்ப வேண்டும்?  நான் நம்புகிறேன். இனியும் இன்பம் மறுக்குமோ எனை சேர!!!!


(எழுத்தாளர் பிரபாவதி, சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். பேக்கிடெர்ம் டேல்ஸ் (publishers) மூலம் ஏனையோருடன் சேர்ந்து 42 புத்தகங்களில் எழுதியிருக்கிறார். ராணி, விகடகவி, மலர்வனம், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், இறகுகள், தமிழ்நாடு இ பேப்பர், மின் கைத்தடி உள்ளிட்டவற்றில் இருபத்தி ஐந்துக்கும் மேல் சிறுகதைகள் எழுதியுள்ளார். தனது மகளுடன் இணைந்து ஒரே கதையை ஆளுக்கொரு அத்தியாயமாக எழுதி 2 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். சின்னஞ்சிறு கதைகள் என்ற சிறுகதை தொகுப்பும், Booner to GenZ அலப்பறைகள் என்ற 35 பகுதிகள் அடங்கிய நாவலும் எழுதியுள்ளார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்