Monday Evening Special Story: கௌரவக் கொலை!

Nov 09, 2026,05:01 PM IST

- முனைவர் தி.தங்கலட்சுமி


"ஹே... என்ன கீத்து..., ரொம்ப சோகமா இருக்கற மாதிரித் தெரியுறயே" என்றாள் உயிர்த்தோழி பிரியா.


"நேத்து உன் பிறந்தநாளெல்லாம் செம்ம ஹேப்பியா செலிபிரேட் பண்ணி இருப்ப, இன்னைக்கும் ஹேப்பியா இருப்பண்ணு பார்த்தா, நீ ரொம்ப டல்லா இருக்கியேப்பா? என்னாச்சு..?" 


 "அதெல்லாம் ஒண்ணுமில்ல பிரியா, வழக்கம் போல எங்க மம்மிக்கும் பாட்டிக்கும் சண்டை. பாட்டி கோவிச்சுக்கிட்டு, 

வீட்டைவிட்டுப் போய்ட்டாங்க." என்றாள் சோகமாக.


"அட! விடுப்பா... பெரியவங்கன்னா, இதுமாதிரி ஏதாவது சண்டை போடுவாங்க... அப்புறம் சமாதானம் ஆகிடுவாங்க.

நீ எதுக்கு இவ்ளோ... ஃபீல்பண்ற" என்று தன் தோழியைச்  சமாதானம் செய்ய முயன்றாள் பிரியா. 


"இல்ல பிரியா... இந்த தடவ பாட்டி ஒரு முடிவோட அவங்க திங்க்ஸ் எல்லாம் ஒரு பையில போட்டு எடுத்துக்கிட்டு வீட்டவிட்டுக் கிளம்பிட்டாங்க"




இதற்கு என்ன சொல்வது என்று தெரியாத சிறுமி பிரியா, தன் ஆருயிர் தோழிக்காக வருந்தினாள். ஆறாம் வகுப்புத் தோழிகள் இருவரும் தங்கள் மனதிற்குள்ளாக வருந்தினர். 


--


நேற்று மாலை.


கீத்துவின் பிறந்தநாளிற்காக அவளும் அவளது பெற்றோரும் கோவிலுக்குச் சென்றிருந்தார்கள். அங்கு கோவில் வாசலில் தன் பாட்டியை எதிர்பாராது பார்த்ததில் கீத்து, சத்தமாக "பாட்டி..." என்று கத்திக்கொண்டே ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள். 


மாலை பிரதோஷ வழிபாடு காரணமாக அன்று கோவிலில் ஏக்கச்சக்கமான பக்தர்களின் கூட்டம். கூட்டத்திற்கு மத்தியில் தங்கள் பெண் யாரோ ஒரு பிச்சைக்கார அம்மாளைக் கட்டிக்கொண்டு நிற்கிறாளே என்று மிகுந்த பதற்றத்துடன் ரஞ்சனி பூக்கடையில் இருந்து விரைந்து வந்தாள். கோபாலன் வாங்கிய பிரசாதத் தட்டிற்கு உரிய பணத்தைக் கொடுத்துவிட்டு, சாதாரணமாக வந்தான்.


அதற்குள் இங்கு கோவில் வாசலில், சாமி கும்பிட வந்த பக்தகோடிகளில் சிலர் ஒரு கூட்டமாகக் குழுமிவிட்டனர். சாமியை மறந்துவிட்டு, மாமியார் - மருமகள் சண்டையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றனர். 


கூட்டத்தைக் கவனியாது நடக்க இருந்த கோபலனை அவனது மனைவியின் கோபாவேசக் குரல் தடுத்து நிறுத்தியது. "இது ரஞ்சனி குரல் போல இருக்கே?" என்று எண்ணிக் கொண்டு திடுக்கிட்டு நின்றான்.


கூட்டத்தை விலக்கி உள் நுழைந்தவனுக்கு மேலும் பயங்கர அதிர்ச்சி. பிச்சைக்காரத் தோற்றத்தில் தன் அம்மா.


--


இரவு வீட்டில் ஒரே களேபரம். ரஞ்சனி ஒருபக்கம், கோபாலன் ஒருபக்கம் என்று பத்மா அம்மாவைப் போட்டு வறுத்தெடுத்துவிட்டார்கள்.


கோபாலன் மிகுந்த மனவருத்தத்துடன், "ஏன் அம்மா... இப்படி என் மானத்தை வாங்க வேண்டுமென்றே கோயில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறாயா???" என்று தன் தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான். (அவனோ ஒரு பெரிய பெயர் பெற்ற வங்கியின் மேனேஜர்)


ரஞ்சனி, இதற்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதுபோல ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு, ஆனால், 

முணுமுணுவென வசைபாடிக் கொண்டு இருந்தாள். 


குழந்தை கீத்துவிற்குக் காரணமே தெரியாமல் அழுகை அழுகையாக வந்தது. 


பத்மா அம்மா, குனிந்த தலை நிமிராமல் அமைதியாகவே இருந்தார். அவர் மனம் முழுவதும் வெம்பி வெறுத்துப் போய் இருந்தது. 


'இன்று வந்து இத்தனை கரிசனத்தோடு கேள்விகேட்கும் மகன், ஆறு மாதத்திற்கு முன்பு தன் கணவர் இறந்த பிறகு, இன்றுதான்  தன்னோடு பேசவே செய்கிறான்' என்பதை நினைத்துக் கொண்டு இருந்தார். 

 

'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்' என்று சும்மாவா சொல்லி வைச்சாங்க... என்று மனம் என்றோ படித்த இலக்கிய ஆதாரங்களை எல்லாம் தேடிக் கொண்டு இருந்தது. 


'உன் பொண்டாட்டி எனக்கு மூன்று வேளையும் சோறு போட்டா, நான் ஏன்ப்பா, கோயில் வாசலுக்குப் போகப் போறேன்' என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார்.


--


பத்மா அம்மா, கணவர் இருந்தவரை மகாராணி போல் வாழ்ந்தவர்.  அவர் இறந்த வீட்டோடு இவரின் வாழ்வும் அஸ்தமித்துவிட்டது. 


அப்பா இறந்து ஒரு வாரம் கடந்த நிலையில், ஒருநாள் மகன் கோபாலன், தன் மனைவி ரஞ்சனியிடம், "பேசாமல் அம்மாவை எங்காவது ஹோமில் சேர்த்துவிடலாமா என்று யோசிக்கிறேன். நீ என்ன நினைக்கற?" என்றான். 


ரஞ்சனி உடனே, "அதெல்லாம் எதுக்குங்க... அங்கெல்லாம் சேர்த்தா, மாசாமாசம் ஆயிரக்கணக்குல பணங்கட்டணும்.

பேசாம அம்மா, நம்ம கூடவே இருந்திட்டுப் போகட்டும்" என்றாள்.


"உனக்கும் அவங்களுக்கும் சுத்தமா ஆகாதே. அதான் கேட்டேன். இதற்குமேல் உன் விருப்பம்." என்று சொல்லி பேச்சை அத்தோடு நிறுத்திக் கொண்டான்.


சில வாரங்களில் இருந்து பத்மா அம்மா, நாள் தவறாது காலையில் கோவிலுக்குச் சென்றால், இரவுதான் வீடுவந்து சேர்வார். எங்கு செல்கிறார், எங்கு சாப்பிடுகிறார் என்று வீட்டில் உள்ள யாருக்கும் எதுவும் தெரியாது. ரஞ்சனிக்கும் 'தொல்லை விட்டது..' என்று கண்டும் காணாமலும் இருந்துவிட்டாள். 


கோயிலில் மதியம் நடக்கும் அன்னதானமும் பிறந்தநாள், கல்யாண நாள், நல்லநாள் பொழுதுகளில் எல்லாம் கருணை உள்ளம் கொண்ட மக்களின் அன்னதானத்திலும் ஏதும் விஷேச நாட்கள் இல்லாத போது சிதறுகாய் தேங்காயும், எறும்புகள் மொய்க்கும் வெல்லக்கட்டிகளும் உணவாய் கிடைத்தன. 


இன்று.... 


நான்கு சுவருக்குள் நால்வரும் நான்கு திசை நோக்கிய ஒட்டுறவற்ற உறவாய் பேச்சற்று முடங்கிக் கிடந்தனர். 


(முனைவர் தி. தங்கலட்சுமி, எங்கும் நீக்கமற நிறை ஈசனின் திருவருளால் கல்விக்கண் தந்த பெருந்தலைவர் அவதரித்த விருதை மண்ணில் வசிக்கும் பாக்கியம் பெற்றவர். பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் ஆனந்தப் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்