தன்னம்பிக்கை தந்த வெற்றி

Su.tha Arivalagan
Mar 30, 2026,05:08 PM IST

- பூரணவல்லி சேகர்


கண்ணன் ஓரளவு புத்திசாலி. ஆனால் அவன் கறுத்த நிறமும், சீரற்ற முக அமைப்பும் காரணமாக, பலர் அவனைத் தவிர்த்து நடந்தனர். வகுப்பில் சில மாணவர்களே அவனுடன் பழகினர். இதனால், கண்ணன் அடிக்கடி தனிமையை உணர்ந்தான்.


அவனின் பெற்றோர் மட்டுமே அவனை அன்புடன் அணைத்துக் கொண்டனர்; உடன் பிறந்தவர்களுக்குக் கூட, அவனைப் பற்றிய எண்ணம் உயரமாக இருக்கவில்லை.


“ஒருநாள் என் பெயர் செய்தித்தாளில் பெரிதாக வர வேண்டும்… அனைவரும் என்னைப் பாராட்ட வேண்டும்…” — இந்த எண்ணமே கண்ணனின் உள்ளத்தில் அடிக்கடி முளைத்தது.


காலம் கடந்து சென்றது. வயதோடு அவனின் மனமும், எண்ணங்களும் மாற்றமடைந்தன. தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற ஆசை அவனை முன்னேற்றியது. தன் தோற்றத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துடன், கண்ணன் மும்பை நகரத்திற்குச் சென்று பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டான்.


அந்த மாற்றம் அவனுக்கு வெளிப்புற அழகை மட்டும் அல்லாமல், உள்ளார்ந்த நம்பிக்கையையும் தந்தது. அவன் மனம் இப்போது அமைதியுடனும் உற்சாகத்துடனும் நிரம்பியது.




சித்திரை மாதம் வந்தது. சித்திரை பௌர்ணமி திருவிழா நகரமெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த விழாவின் ஒரு சிறப்பாக, “அழகிப் போட்டி” நடைபெற்றது.


பலர் பங்கேற்ற அந்தப் போட்டியில், அனைவரையும் கவர்ந்த ஒரு அழகியர் முதலிடம் பெற்றார் — அவரது பெயர் கவிஷ்கா.


அடுத்த நாள், அனைத்து நாளிதழ்களிலும் கவிஷ்காவின் வெற்றி செய்தி பெரிதாக வெளியானது. அந்தப் புகைப்படத்தை பார்த்து கண்ணன் மகிழ்ச்சியில் மூழ்கினான்…


ஏனெனில், அந்த “கவிஷ்கா” யாருமல்ல —

தன் தோற்றத்தையும், தன்னம்பிக்கையையும் மாற்றிக் கொண்டு ஏற்றுக் கொண்ட  கண்ணனே!


ஒருகாலத்தில் தன்னை ஏளனமாகப் பார்த்த உலகமே, இன்று அவனை பாராட்டுகிறது.


“அழகு என்பது தோற்றத்தில் மட்டும் இல்லை; அது தன்னம்பிக்கையிலும், மன உறுதியிலும் உள்ளது” என்பதை கண்ணன் தனது வாழ்க்கையால் நிரூபித்தான்.  கவிஷ்கா அரசாங்கத் தேர்விலும் தேர்ச்சி பெற்று அரசாங்கப் பணியில் சேர்ந்தாள்.


(ப.பூரணவள்ளி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்,