வடிகால்.. ஒரு நிமிடக் கதை (47)

Su.tha Arivalagan
Oct 29, 2026,11:11 AM IST

- பூரணவள்ளி சேகர்


கீதாவிற்குச் செடிகள் மரங்கள் வளர்ப்பதில் கொள்ளை பிரியம். வீட்டைச் சுற்றிலும் நிறைய மரங்கள் மற்றும் செடிகளை நட்டு வளர்த்து வந்தாள். மாடியிலும் மாடித் தோட்டம் போட்டு செடிகள் வளர்த்து வந்தாள்.


ஒவ்வொரு செடிகளிடமும் தினமும் சென்று மனதாரப் பேசுவாள். பூக்காத மற்றும் காய்க்காத செடிகளைத் தொட்டு தடவிக் கொடுத்து அன்பாகப் பேசுவாள். அடுத்த ஒரு சில நாள்களில்  அந்தச் செடிகள் பூத்துக் குலுங்கும்.


மூலிகைச் செடி வகைகளும்  வளர்ந்திருந்தன. தான் ஒருத்தி மட்டும் தான் என்பதால் தனக்குத் தேவையானதைத் தவிர மற்ற பூக்கள் காய்களை தன் நண்பர்களுக்கும் கொஞ்சம் கொடுப்பாள்.


அதிகமாக உள்ள காய்களை அருகில் உள்ள கடைக்காரர் வாங்கிச் சென்று விடுவார். மரங்கள் மற்றும் செடிகளுக்கு இயற்கை உரங்கள் மட்டுமே போடப் பட்டன. உடல் நலமில்லாத போது கூட தோட்டத்தைச் சென்று பார்வையிட மறக்க மாட்டாள் கீதா.




கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வீட்டில் கீதா தனியாக வசிக்கிறாள். அவள் தன் கணவனிடம் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்தாள். தன் ஒரே மகள் புஷ்பாவையும் பிரிய நேர்ந்தது.


கணவனுடன் புஷ்பா மகிழ்ச்சியாக இருப்பதை அறிந்த கீதா சில காலம் மகள் மீது கொண்ட அன்பை நினைத்து வருந்தினாள். கீதாவும் கணவனும் பொருளாதாரத்தில் ஒருவரையொருவர் சார்ந்திருக்கவில்லை.  எனவே அவர்களிடையே பணப் பிரச்சினை இல்லை.


தம் சொந்த உழைப்பால் வீடு வசதி அனைத்தும் கொண்டிருந்த கீதா கணவனைப் பிரிந்த போது கூட கலங்கவில்லை. தன் ஒரே மகளை மட்டுமே நினைத்து வருந்தினாள்.


புஷ்பா தன் தாயை விட தந்தையுடன் இருப்பதையே விரும்பியதால் கீதா மகளையும் விட்டுக் கொடுத்தாள்.


தனியாக வாழும் நிலையில் தன் வாழ்க்கையில் ஒரு பிடிமானமும் அர்த்தமும் தேவை என்று உணர்ந்த கீதா செடிகள் வளர்ப்பதில் மனதைத் திருப்பினாள்.


மகள் மேல் கொண்ட அன்பு செடிகள் மற்றும் மரங்கள் மேல் திரும்பியது. கீதாவின் அன்பின் ஊற்றிற்கு இந்த செடிகள் வடிகாலாக இருந்தன.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)