ராசாத்தி - ஒரு நிமிடக் கதை (41)

Su.tha Arivalagan
Oct 20, 2026,12:57 PM IST

- பூரணவள்ளி சேகர்


அந்த திரைப்படம் அதிரடி ஹிட். கதாநாயகி ஸ்பூர்த்திக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. ஒரு படத்தில் தான் நடித்திருந்தாலும் அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.


நடிகைக்கென்று ரசிகர்கள் பலர் இருந்தனர். நடிகையின் பூர்வீகம் பற்றி அறிந்து கொள்ள எவ்வளவு முயற்சித்தும் பத்திரிகையாளர்களால் ஏதும் திரட்ட முடியவில்லை.


எந்தப் பக்கம் திரும்பினாலும் ஸ்பூர்த்தி என்ற பெயர் தென்பட்டது. தொலைக்காட்சி வானொலி ஆகிய எல்லாவற்றிலும் நடிகையின் பேட்டி இருந்தது.


ஸ்பூர்த்தி தான் மும்பையில் பிறந்து வளர்ந்ததாக மட்டும் கதைகள் கூறினார். ஆரம்பக்கல்வி மட்டுமே படித்ததை எங்கும் வெளிப்படாமல் பார்த்துக் கொண்டார். அந்த படத்தில் வரும் வந்தாளே  ராசாத்தி என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது.




ஊரில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் சிறப்பு அழைப்பாளராகவும் முக்கிய விருந்தினராகவும் கலந்து கொண்டார். எல்லா நிகழ்வுகளிலும் முழுமையாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


சிவகங்கையில் புதிதாகத் திறக்கப் போகும் துணிக்கடையைத் திறந்து வைக்க நடிகை அழைக்கப்பட்டார். துணி வாங்குவதை விட நடிகையை நேரில் பார்க்கக் கூட்டம் அலைமோதியது.

  

கூட்டத்தின் ஊடே அந்த ஊரில் தங்கியிருந்த நாடோடிக் கூட்டத்தில் இருந்து பலர் வந்திருந்தனர். அவர்களில் சிலர் ராசாத்தி என்று சத்தமாக அழைத்தனர். அழைப்பில் தான் ஏற்கெனவே கேட்ட குரல் அழைப்பு கேட்ட நடிகை சட்டென்று திரும்பினார்.


அவர்களைப் பார்த்தும் பார்க்காதது போல் நடந்து கொண்டு விரைவில் வெளியேறினார். நடிகை ஸ்பூர்த்தி யின் பெயர் ராசாத்தி என்றும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவள் என்றும் நடிகைக்கும் அந்த நாடோடிகளுக்கும் மட்டும் தெரியும்.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)