வேலூர் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்
வேலூர்: வேலூரில் உள்ள பொற்கோவிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு டிசம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரத்துக்கு வந்தார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை ஆளுநர் ரவி, மத்திய இணையமைச்சர் முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வேலூர் வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று மதியம் 1 மணி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைத்தார்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வேலூர் வருகையினை முன்னிட்டு 2 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.