தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!

Meenakshi
Oct 21, 2025,04:57 PM IST

டெல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.


பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில், தீபாவளி பண்டிகையின் புனிதமான இந்த தருணத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். சமீப காலங்களில் பலர் வன்முறைகளை விட்டு சரணடைந்து வருகின்றனர். இது நமது நாட்டின் அரசியலமைப்பின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இந்த வரலாற்று சாதனைகளுக்கு மத்தியில், நாடு அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களிலும் இறங்கியுள்ளது. நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டது. இதனால் தீபாவளியின் போது மக்கள் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சேமித்தனர்.




உலகில் பல நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தாலும், இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா மாறும். வளர்ச்சி அடைந்த இந்தியா மற்றும் தன்னம்பிக்கை கொண்ட நாடு என்ற பயணத்தில் வெற்றி பெறுவதற்கு குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு, தேசத்திற்கான நமது கடமைகளை நிறைவேற்றுவதாகும். ஒரு விளக்கை மற்றொரு விளக்கு ஏற்றும் போது பிரகாசம் குறைவதில்லை. மாறாக பிரகாசம் அதிகமாகும் என்பதை தான் தீபாவளி உணர்த்துகிறது.


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி சுதேசி என்று நாம் பெருமையுடன் கூறுவோம். 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை ஊக்குவிப்போம். அனைத்து மொழிகளையும் மதிப்போம். தூய்மையைப் பேணுவோம். நமது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்போம்.  சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைத்து கொள்ள வேண்டும். யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த முயற்சிகள் அனைத்தும் நம்மை வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.