தமிழின் பெருமை திருக்குறள்!
- எம்.கே. திருப்பதி
குரைகடல் சூழ்வாழ்
குடியினம் தன்னில்
குறை ஒன்றும் இல்லா
நிறை நிறை நன்னூல்!
ஈரடிச் செய்யுளில்
ஈர்த்த வெண்பா
ஏழ் சீரில் எழுந்து
கோள் வணங்கும் நன்பா!
குறள் என்றால்
குறுகிய வடிவம்: அதன்
குரலைக் கோவிலாய்
கும்பிடும் உலகம்!
குவலயம் கடைத்தேற
குறித்தது குறள் ஈரடி
ஈரடியால் ஈரப்பட்டு கிடக்கும்
ஈரத்தமிழன் நாவடி!
அதிகாரம் ஆயிரத்து
முன்னூற்று முப்பது...
காலம் காலமாக நம்
கருத்தில் நிற்பது!
அறம் பொருள் இன்பம்
அனைத்தும் நல்கிய
தனித் தமிழ்மறை!
தரணியின் பொதுமறை!
திருக்குறள் தீட்டிய
திருமகன்
தெய்வப்புலவன்
மெய்யது தொழுவோம்!
தமிழின் சிறப்பை
தமிழன் சிறப்பை
தலைமேல் ஏற்றி
தரையெங்கும் புகழ்வோம்!
அசையோடு
அசைந்து வரும்
இசையை நாளும்
அசை போடுவோம்!
நசையோடு நெஞ்சிலேற்றி
பசையோடு பாடுவோம்!
அணுவைத் துளைத்து
ஏழ்கடலை புகுத்தி
குறுகத் தரித்த குறள்!'
அலங்கரிக்கும் இப்படி!
அணிந்துரை எப்படி?
தமிழா நீ
தமிழை எண்ணி
தருக்கலாம்! அதன்
தகவைப் பெருக்கலாம்!
இன் தமிழா -- இரு நீ
இமயப் பொருப்பாய்!
இயங்கலில் இரு நீ
இமையா பொறுப்பாய்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)