உழுது விளைந்த நிலம் ஊத்துத் தண்ணீ பாஞ்ச நிலம்

Su.tha Arivalagan
Jul 27, 2026,12:44 PM IST

- பி.எஸ். முருகேசன்


உழுது விளைந்த நிலம்

ஊத்துத் தண்ணீ பாஞ்ச நிலம்


ஊருக்கு அன்னம் தந்த 

உத்தமரு வாழ்ந்த நிலம்


காஞ்சு கிடக்கு தடா 

கழுதை வந்து மேயுதடா


உழவன் இடும் கண்ணீரு 

ஊத்தையும் தான் விஞ்சுதடா


சோத்துக்கு பஞ்சம் வரும் 

சோதனை காலமிதோ




காஞ்ச நிலமாகி

கருவாடு காயுதடா


தீஞ்ச நிலமாகி 

தீயும் எரியுதடா


குடிதண்ணீர் காசு ஆச்சு 

குடும்பமும் மோசம் ஆச்சு


வடிகஞ்சி பஞ்சம் வந்து 

வாட்டு தடா வாழ்க்கையிலே


ஊரு விட்டு ஊரு வந்து 

உழைக்கும் நிலையாச்சு


நாடு விட்டு நாடு போய் 

பிழைக்கும் நிலையாச்சு


உறவுகள் சொந்தம் எல்லாம் பிரியும் நிலை ஆச்சு


உதவியென போனோரை 

உதவாக்கரை என்பர்


உயிரான நண்பர்களே 

ஒதுங்கித் தான் போவார்கள்


பொல்லாத உலகில்

பொழைப்பது எவ்வாறு


பாலும் மழை பெஞ்சா 

பஞ்சமும் தீருமே


விவசாயி வாழ்க்கை 

விடியலாய் ஆகுமே


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)