Folk song by PS Murugesan: பட்டிக் காட்டு மாமன் என்னை கட்டிக் கொள்ள வா புள்ளே!
Sep 21, 2026,11:39 AM IST
- கவிஞர் பி எஸ் முருகேசன்
சின்னாளபட்டி சிங்காரம் பெத்த புள்ளே
கண்டாங்கி சேலையிலே
கலக்குறீயே ராக்காயி
குண்டாக இருந்தாலும்
குலுக்கி நடக்கயிலே
சட்டுன்னு ஏ மனசு
சரிக்கி விழுகுதடி
கட்டான ஓ மேனி
கருப்பாக இருந்தாலும்
காந்தம் போல
ஏ மனசை கவர்ந்து இழுக்குதடி
சிட்டான ஓ மொகம்
சிரிக்கும் அழகிலே
கட்டிக் கிடக்குதடி
கட்டான ஏமனசு
பட்டிக் காட்டு
மாமன் என்ன
கட்டிக் கொள்ள
வாடி புள்ளே
வெக்கம் கொள்ள வேண்டாம் புள்ளே
வெவரம் உள்ள
ஆளு நானு
வைகை நதி ஓடும்
மா மதுரைச் சீமையிலே
மீனாட்சி சொக்கருக்கு
சித்திரையில் கல்யாணம்
ராக்காயி மனசு வச்சா
ராசிபலன் தேவையில்லே
சம்பந்தம் போட்டு
சரியான முகூர்த்தத்திலே
மாங்கல்யம் பூட்டி
மகிழ்வுடன் வாழ்வோமே
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)