ஆறு பெருக்கெடுத்து ஆள வட்டம் போடுதடி!

Sep 16, 2026,03:45 PM IST

- கவிஞர் பி.எஸ்.முருகேசன், திண்டுக்கல்


கோடைமழையடிச்சு 

கொளம் குட்டை நெரம்புதடி 

ஆறு பெருக்கெடுத்து 

ஆள வட்டம் போடுதடி 


நாடு செழிக்குதடி

நல்ல மழை பெய்யுதடி 

காடு களனியெங்கும் 

கதிர் விளையுமடி 


சோத்துக்கு பஞ்சமில்லை

சொந்தங்களும் தூரமில்லை 

பகுத்து உண்பதால் 

பாதிப்பு ஒன்னுமில்லை 




வள்ளுவன் சொன்னதெல்லாம் 

வாழ்க்கையில் உண்மையடி 

தெள்ளுதமிழ் பேச்சு 

தேனாக இனிக்குமடி 


முல்லை மலர் வாசம் 

அள்ளி அணைக்குமடி

பிள்ளைகள் பாசம் 

பேரின்பம் கொடுக்குமடி 


முத்தான பற்களும் 

வெத்தலை போட செவக்குமடி 

புன்முறுவல் சிரிப்பில் 

புது வாசம் அடிக்குமடி 


பொம்மை தலையாட்டி 

பூரிப்பில் ஆழ்த்துமடி 

தென்னை இளம்காற்று 

தென்றலாய் வாழ்த்துமடி 


பொன் வண்டு

ஓசை நயம் 

ரீங்காரம் இசைக்குதடி 

மான் ஓடும் வேகத்திலே 

மரம் செடிகள் அசையுதடி


தேன் கூடு

கலையுதடி 

தேன் மாரி பொழியுதடி 

தேவதை நீயிருக்க 

தேவைகள் நிறையுமடி 


பாவை உன் 

கண் பட்டால் 

பாலையும் சோலை 

ஆகுமடி 

பார்த்த கனவும் 

பலிக்குமடி 


விடியல் சூரியனின் 

வெப்பம் குளிருமடி 

கொடியிலே தாமரைப்பூ 

நொடியில் சிரிக்குமடி 


கோதை உந்தன் கூந்தலோடு 

சேர்ந்து சொலிக்குமடி

கோமகன் மாமன் என்னை 

கூடி அணைக்குமடி


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்