Short story: பிரார்த்தனை!

Sep 16, 2026,03:58 PM IST

- எம்.எல். பிரபா


ராஜன் மிகவும் சோகமாக இருந்தான். பிரபு, தன்னுடைய நண்பனை பார்த்து 'ஏன்டா அமைதியா இருக்க? என்கிட்ட பேசணும் தானே வந்த, பேசாம இருந்தா எப்படி? என்றான். விஷயத்தை சொன்னாதானே என்னால ஏதாவது உதவி செய்ய முடியும் என்றான் பிரபு. 


ஏற்கனவே நீ எனக்கு ரொம்ப உதவி செஞ்சுட்ட திரும்பவும் உன்னிடம் பண உதவி கேட்டு வந்தது எனக்கு கஷ்டமா இருக்கு. தெரிஞ்சவங்க எல்லார்கிட்டயும் கேட்டு பாத்துட்டேன் யாரும் பணம் தர மறுத்துட்டாங்க. அதனால தான்.…. 


பரவாயில்லை டா, விஷயத்தை சொல்லு! என் பையனுக்கு திடீர்னு வயித்து வலின்னு சொன்னான். நானும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனேன். டாக்டர் அவனை டெஸ்ட் பண்ணார். பையனோட வயித்துல பிரச்சனை இருக்குன்னு சொல்லி என்ன பயமுறுத்திட்டாரு. ஸ்கேன் பண்ணனும், ரத்தம் டெஸ்ட் எடுக்கணும். அது, இதுன்னு சொல்லி ஹாஸ்பிடலில் பத்தாயிரம் ரூபாய் கட்டணும்னு சொல்லிட்டாரு. மாசக் கடைசி என்னிடம் அவ்வளவு ரூபாய் இல்ல அதான் உன்கிட்ட உதவி கேட்டு வந்தேன் என்றான் சற்று தயக்கத்துடன். 


டேய், பையனோட விஷயம்! முக்கியமானதுடா! இரு வரேன், என்று உள்ளே சென்ற பிரபு பீரோவில் இருந்து பத்தாயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு வந்து ராஜனிடம் கொடுத்தான். ரொம்ப தேங்க்ஸ் டா என்றான் ராஜன். நான் சீக்கிரமா இந்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன்டா .சரி ..சரி ..அப்புறமா பாத்துக்கலாம். டேய் போற வழியில பெருமாள் கோயில் ஒன்னு இருக்கு அங்க போய் சாமி கிட்ட வேண்டிக்கிட்டு போ, பாரத்தை அவன் மேல போட்டுட்டு நம்பிக்கையோட போ. அவன் எல்லாத்தையும் பாத்துப்பான். நீ கவலைப்படாத , என்றான் பிரபு.




அப்போது தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது. பாபு கைக்குழந்தையாய் இருக்கும் போது உடம்புக்கு  சரியில்லாமல் போனது. மூணு நாட்கள் விடாமல் ஜுரம் அடித்துக்கொண்டே இருந்தது .அப்போது மிகுந்த பயத்துடன் சாமியிடம் வேண்டிக் கொண்டான்." கடவுளே என் குழந்தையை  எப்படியாவது காப்பாத்திடு. குழந்தைக்கு, உடம்பு சரியானதும் எடைக்கு எடை காசை காணிக்கையாக தருகிறேன் என்று வேண்டிக் கொண்டது. குழந்தைக்கு உடம்பு ஓரிரு நாட்களில் சரியாகி விட்டது. ஆனால், அவனிடம் அப்போது காசு இல்லை .அதனால் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான். 


பிறகு சில நாட்கள் ஆனதால் கையில் உள்ள காசை கோவிலில் பிரார்த்தனையாக செலுத்த மனசு வரல. அதனால் இன்னும் கொஞ்ச நாள் தள்ளிப் போட்டான். அதற்குப் பிறகு மறந்தே விட்டான். இப்போ கடவுளே மீண்டும் எனக்கு ஞாபகப்படுத்தி இருக்கிறார் போல இருக்கு. இந்த முறை கட்டாயம் பிராத்தனையை நிறைவேற்றி விடுவேன் என்று சொல்லிவிட்டு விர் ரென்று நடந்து சென்றான் ராஜன். ஒரு வாரத்தில் பாபுவுக்கு உடம்பு சரி ஆகிவிட்டது. 


ராஜன்  கோயிலுக்கு சென்று காணிக்கை செலுத்த பையன் பாபுவையும் அழைத்துக் கொண்டு எடை போட சென்றான். அவன் முதல் நாளே கொஞ்சம் ரூபாய்க்கு நாணயங்களாக சில கடைகளில் மாற்றி வைத்துக் கொண்டிருந்தான். மேலும் அது எடை குறைந்ததால் மீண்டும் கோவிலுக்கு பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று தன்னுடைய பாக்கெ ட்டில் இருந்து ரூபாய் எடுத்து அதற்கான சில்லறையை வாங்கிக் கொண்டார். பிறகு உண்டியல் இருக்கும் இடத்திற்கு சென்று எடை போட்ட நாணயங்களை செலுத்தப் போனான். 


அப்பொழுது ஒரு பெரியவர் ஐயா என்று கூப்பிட்டு ஒரு 500 ரூபாய் தாளை அவரிடம் கொடுத்தார். உடனே ராஜன் அந்த ரூபாயையும் வாங்கி தான் போட வைத்திருந்த சில்லறையுடன் சேர்த்து உண்டியலில் போட்டான் .வெளியே வந்த ராஜன் அந்த பெரியவரை பார்த்து கேட்டான் ஐயா உங்களைப் பார்த்தால் மிகவும் வறுமையில் உள்ளவர்கள் போல் இருக்கிறீர்களே? நீங்கள் ஏன் 500 ரூபாய் நோட்டை உண்டியலில் போட சொன்னீர்கள். கடவுளிடம் அதிகமாக ரூபாய்கள் உள்ளது. உங்களுக்காக அந்த தொகையை செலவு செய்திருக்கலாமே என்றான்.


அதற்கு அந்த வயதானவர் நீங்கள் அந்த கடையில் சில்லறை வாங்கும்போது உங்க பேண்ட்  பாக்கெட்டில் இருந்து இந்த ரூபாய் கீழே விழுந்தது. அதை நீங்கள் கவனிக்காமல் சென்று விட்டீர்கள். நான் அதை எடுத்துக் கொண்டு  உங்கள் பின்னாடியே வந்தேன். நீங்கள் கோவிலுக்கு செல்வதை பார்த்தவுடன் நானும் வந்து சாமி கும்பிட்டு, அந்த பணத்தை உங்களிடம் கொடுத்தேன். நீங்கள் தான் அதை உண்டியலில் போட்டீர்கள் என்றான்.


என்ன சொல்கிறீர்கள்? என்று ராஜன் அதிர்ச்சியானான். அங்கு வந்த நண்பன் பிரபு 'சாமி கிட்ட வேண்டிகிட்டதை உடனே நீ செலுத்தவில்லை அதிக நாட்கள் தள்ளி போட்டு விட்டாய். பெருமாளே ,அந்த காசுக்கு வட்டியோடு சேர்த்து உன்னிடம் வாங்கிவிட்டார் பாத்தியா' என்றான் சிரித்துக் கொண்டே... 


'பெருமாள் கிட்ட பிரார்த்தனை செய்யும்போது முழு நம்பிக்கையோடு வேண்டிக்கணும்' காரியம் முடிந்தவுடன், பெருமாளுக்கு போய் சேர வேண்டிய காணிக்கையை திருப்பி செலுத்தும் போது முழு மனசோட நன்றி சொல்லி நிறைவேற்ற வேண்டும். அதுதான் நமக்கும், நமது குடும்பத்திற்கும் நல்லது என்று சொன்னான்.


ராஜன் தனது தவறை உணர்ந்து பெருமாளிடம் மன்னிப்பு கேட்டு மனம் உருகி வேண்டினான். பிரார்த்தனை பலித்தது.


(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்