வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

Sep 16, 2026,04:50 PM IST

- முனைவர் என்.பத்ரி


வாஸந்தி ஏர்போர்ட்டுக்கு கிளம்பத் தயாரா இருந்தாங்க. ’ஏன் இன்னைக்கு இவ்வளவு லேட்டு,பாபு? நான் புறப்படம்னும்னு தெரியுமுள்ள’சற்றே  அவனைக் கடிந்து கொண்டாள். 


’இல்ல மேடம். வர வழியில கொஞ்சம் வண்டி ரிப்பேர்ன்’னு வழிஞ்சான். அவன் சொல்லுவது பொய் என்று அவளுக்கு புரிந்து விட்டது. இருந்தாலும் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் கடைசி நாள் என்பதால் பெரிதாக அவனைக் கண்டு கொள்ளவில்லை கண்டு கொள்ளவில்லை.


புறப்படத்தயாராக இருந்த  வாஸந்தி கிட்ட, பாபு  போய் ‘மேம்,இது என்னோட சின்ன கிஃட் ’ன்னு சொல்லி கையிலிருந்த ஸ்வீட் பாக்ஸை அவங்க கிட்ட கொடுத்தான்.


’என்னது?’ என்றாள்.


’பாஸந்தி’ என்றான்பாபு.


’ஓ!சூப்பர்.எங்கப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்’ என்றபடியே தன் கைப்பையில்  வைத்துக் கொண்டாள். பாபு  அப்படியே ஷாக் ஆயிட்டான். 'இதுக்காக இவ்வளவு நான் மெனக்கெட்டிருக்க வேண்டாமோ? 'என்று நினைத்தபடியே அலுவலக வேலைகளை சலிப்போடு பார்க்கத் தொடங்கினான்.


முதல் நாள் நடந்தது இதுதான்.




வாஸந்திதான் அந்த ஆபீஸின் சீஃப் மேனேஜர்.போன வாரம் அவங்க அப்பா வந்திருந்தார். அப்போது 

வாஸந்தியின் டேபிள் மேல ஒரு சின்ன பாக்ஸ் இருந்தது. அதில் இருந்தது பாஸந்தி என்றும்,வாஸந்திக்கு பாஸந்தி ரொம்பவும் பிடிக்கும் என்றும் பாபுவே அனுமானித்துக் கொண்டான்.


இன்னிக்கு மதியம் தான் டெல்லி ஹெட் ஆபீஸ்ல இருந்து போன் வந்துச்சு. நாளைக்கு டெல்லி ஆபீஃஸ்ல வந்து அவங்கள ஜாயின் பண்ணச் சொல்லி.


பாபு ‘எப்படியாவது வாஸந்தி இந்த ஆபீஸ்ல இருந்து ரிலீவ் ஆகறதுக்குள்ள, அவங்களுக்கு பாஸந்தி வாங்கி கொடுக்கணும். அப்பத்தான் அவங்க கான்பிடல்ஷியல் ரிப்போர்ட்ல தன்னப்பத்தி நல்லா எழுதுவாங்க.அதனால அவனுக்கு பிரமோஷன் வரும்’னு ஒரு கணக்கு போட்டு வச்சிருந்தான். 


’இப்ப ஹெட் ஆஃபீஸ்க்கு வேற போறாங்க. பவர்புஃல் ப்ளேஸ், பவர்புஃல் போஸ்ட்.அவங்க மனசு வெச்சா அடுத்து இந்த ஆபீஸ்லேயே  மேனேஜரா அவனுக்கு பிரமோஷன் கெடச்சுடும்’ன்னு அவன் மனம் சொல்லியது.


அன்னிக்கின்னு பாத்து ஆபீஸ்ல எக்கச்சக்க வேலை. அவங்க வேற நாளைக்கு காலைல ரிலீவ் ஆகி போயிடுவாங்க. அவங்களுக்கு அடுத்த போஸ்ட்ல தான் இவன் இருக்கான். வெளியில போகவே முடியல. ஓ.ஏ. கிட்ட சொல்லி வாங்கிட்டு வர சொல்லலாம்னு பார்த்தா, அவன் ஊர் முழுக்கும் தமுக்கு போட்டுடுவான்.


என்ன செய்யறதுன்னு பாபுவுக்கு புரியல. மணி ஆறு ஆச்சு.  மேடம்கிட்ட போயி சொல்லிட்டு,பாஸந்தியை தேடிப் பறந்தான். தேடினான். தேடினான். ஸ்வீட் கடை எல்லாவற்றிலும் தேடினான். சோதனையா எங்கயுமே அந்த  விசேஷமான ஸ்வீட்டு கெடச்சபாடில்ல.


வீட்டுல மனைவி உமாவுக்கு போன் பண்ணி,அவளுக்கு பாஸந்தி  பண்ணத் தெரியுமான்னு கேட்டான்.அவள் ’தனக்கு பாயசம்தான் செய்யத் தெரியும்’னு சொல்லிட்டா.


’நாளைக்கு காலையில 11:00 மணிக்கு பிளைட்ல டெல்லிக்கு போக வாஸந்திக்கு டிக்கெட் வந்துடுச்சு.’ இது ஆபீஸ்லேந்து அவனுக்கு வந்த ’ஜஸ்ட் இன்’ தகவல்.


பாபு லேட்டாத்தான் வீட்டுக்கு போனான். யாரோடையும் பேசல. படுத்த பாபுவுக்கு  எங்க தூக்கம் வந்துது? திடீர்னு அவனுக்கு நினைவுக்கு வந்தது. பக்கத்து வீட்டு  பரந்தாமன் ஃபிரண்டுக்கு நாளைக்கு காலைல கல்யாணம். அந்த கல்யாணத்துல ஒரு வேளை பாஸந்தி போட்டாக்க, நம்ம ஒரு ஓசி பார்சல் வாங்கிடலாமே! 


காலைல சீக்கிரமாவே எழுந்துட்டான். அங்க இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில இருந்துச்சு கல்யாண மண்டபம். தனது டூவீலர வேகமா விரட்டினான் பாபு.அவன் ஃபிரண்டுதான்   மாப்பிள்ளைத் தோழன். ரொம்ப பிஸியா இருந்தான். அவன பார்க்கக் கூட முடியல.


அவனது  மூளையில் பொறி தட்டியது.நேர சமயலறைக்கு போனான். அங்கிருந்த சமையல்காரர் ஒருத்தர் கிட்ட ’மாப்பிள்ளையோட மாமா நான்தான்'னு சொன்னான். நல்ல மரியாதை கிடைச்சது. உடனே தான் கொண்டு வந்திருந்த  புது சில்வர் டப்பியை அவரிடம் நீட்டினான்.பாஸந்தி நிரம்பிய பாக்ஸ் அவன் கைக்கு மாறியது. அடுத்த பத்து நிமிஷத்துல ஆபீஸுல இருந்தான். ஆனா கொஞ்சம் லேட்டாயிடுச்சு. (இப்ப மேல ஒரு தடவை படிங்க,ப்ளீஸ்)


(டாக்டர். என். பத்ரி சுமார் 50 ஆண்டுகள் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியராகத் தொடங்கி, பள்ளித் தலைமை ஆசிரியர், கல்வியியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் எனப் பல தளங்களில் பணியாற்றி, தற்போது பொறியியல் கல்லூரியின் கௌரவ ஆங்கிலப் பேராசிரியராக விளங்குபவர். கல்வியியல் மற்றும் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம், 4 முதுகலை பட்டங்கள் பெற்ற இவர், 1997-98-இல் தேசிய NCERT விருதைப் பெற்றவர். அகில இந்திய வானொலிக் கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றி, கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் வழியாக வழிகாட்டியுள்ளார். 'மை இங்கிலீஷ் கற்றல் அகாடமி' (MELA) நிறுவனச் செயலாளரான இவர், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க உறுப்பினராகவும், புதுவை அரசின் சிறந்த கவிஞர் விருதைப் பெற்றவராகவும் திகழ்கிறார். பல்வேறு இதழ்களில் 800-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 100 சிறுகதைகள் எழுதியுள்ள இவர், முதியோர் மற்றும் இளைஞர் நலனை மையமாகக் கொண்டு 'முதுமை ஒரு வரம்', 'வாய்ப்புகள் வெற்றிகள் ஆகட்டும்' உட்பட பல நூல்களைப் படைத்துச் சிறந்த கல்விச் சேவையாளராகப் புகழ்பெற்றவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்