வாய் திறந்து பேசாமல் கடந்து போறே!
Jun 29, 2026,03:10 PM IST
- கவிஞர் பி.எஸ்.முருகேசன்
வலிய வந்து பேசுகிறேன்
வடிவழகி உன்கிட்ட
வாய் திறந்து பேசாமல்
கடந்து போறே என்கிட்ட
மெய்மறந்து நிக்கிறேன் டி
மேனியும் நடுங்குது
மேதாவித் தனத்தை விட்டு
வாடி மனம் ஏங்குது
கோடி சனம் எனக்கிருந்தும்
தேடுதடி ஓ உறவை
மலை போல கோட்டை கட்டி
காத்திருக்கேன் ஓ வரவை
கனவோடு சேர்த்து வச்சேன்
கணக்கில்லா ஆசைகளை
நினைவாக மாற்றிவிட
நிதர்சனமாக வந்துவிடு
புது ரத்தம் பாய்ச்சுகிற
புண்ணியத்தை செய்துவிடு
கண்ணியமா வாழ்க்கையும் தான்
காலமெல்லாம் வாழவிடு
எப்படியும் வாழ்வோம் என்ற
எண்ணத்தை மாற்றிவிடு
இப்படி தான் வாழ்வோம் என்று
உள்ளத்தில் உறுதிகொடு
பள்ளத்தை நோக்கி
பாய்கின்ற நீர் போல
உண்மை பாசத்தை
என்மீது பாய்ச்சி விடு
சந்தோச வாழ்க்கை தனை
சரித்திரம் ஆக்கிவிடு
ஈருடல் ஓர் உயிராய்
இதயத்தில் இணைந்து விடு
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)