வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
Aug 22, 2026,10:28 AM IST
- கவிஞர் பி.எஸ். முருகேசன்
வட்ட நிலா
பொட்டுக்காரி
வாழைப்பூக் கொண்டக்காரி
கிட்ட வந்து
கேலி பேசும்
கிண்டலுக்குச்
சொந்தக்காரி
நத்த உடம்புக்காரி
நவாப்பழ செகப்புக்காரி
முத்தழகி ஓ சிரிப்பில்
சொத்தப் பல்லு தெரியுதடி
வெட்டவெளி பொட்டலிலே
வெளயாட போரபுள்ள
கட்டழகே நா வாரேன்
கண்ணாமூச்சி ஆடலாமா
மொட்டமல அடிவாரம்
முடுஞ்சு வச்ச பலகாரம்
தட்டுல எடுத்து வச்சு
தங்கோ ஒனக்கு
தாரேன் புள்ள
சின்ன மலயோரம்
சிங்க புலி வாழும் புள்ளே
சீக்கிரம் கெளம்பு புள்ள
செல்லனும் ஊருக்குள்ள
ஒத்தக் கல்லு
மூக்குத் தட்டு
ஒளி கொஞ்சம்
வீசுதடி
ஓவரா பேசுறன்னு
ஊரு சனம் பேசுதடி
பேரென்ன சொல்லுபுள்ள
பெருமாயி பெத்த புள்ளே
வரமா வரம் வாங்கி
வாழ்க்கை தர நிக்கேன்
புள்ள
மத்தாப்பு பொறி போல
மகிழ்ச்சியா ஆகும் புள்ள
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)