சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் நாளை ஆஜராக உத்தரவு

Su.tha Arivalagan
Jul 03, 2026,02:49 PM IST

புதுச்சேரி: தன் சொந்த சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


பின்னணி என்ன?

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதியன்று, புதுச்சேரி எழில் நகர் பகுதியில் வசித்து வரும் தமிழக நிதி அமைச்சர் மரியவில்சனின் உடன் பிறந்த தம்பியான மரியகிலோத் என்பவரது வீட்டிற்குள் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், தம்பி மரியகிலோத் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:




அமைச்சர் மரியவில்சன் சிலவருடன் வந்து தனது சகோதரரை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகளும் சமீபத்தில் சோஷியல் மீடியாவில் பரவியது. இந்தத் தாக்குதல் வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் தற்பொழுது விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகையை (Charge Sheet) அமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராகிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, நாளை (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் அவர் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


பரபரப்பான சூழல்:

அமைச்சர் ஒருவர் தனது சொந்த தம்பி மற்றும் அவரது குடும்பத்தினரையே வீடு புகுந்து தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில், குற்றப்பத்திரிகையைப் பெற நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராகச் சொல்லியிருப்பது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் நீதிமன்ற விசாரணைகள் நாளை அவர் ஆஜரான பிறகு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.