புரட்டாசி முதல் சனிக்கிழமை.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாள்!
- ஸ்வர்ணலட்சுமி
புரட்டாசி முதல் சனிக்கிழமை20.09.2025 - பெருமாள் வழிபாடு செய்ய உகந்த நாள். புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமை 21. 09.2025 - மஹாளய அமாவாசை. இந்த வார இறுதி நாட்கள் ஆன சனி, ஞாயிறு வழிபாடுகள் செய்ய உகந்த நாட்களாக அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும்.
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு:
புராணங்களின்படி புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும்,பெருமாளை வழிபடுவதனால் சனியின் பாதிப்பிலிருந்து விடுபட்டு நற்பலன்களை பெறலாம் என்பதும் ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமை விரதத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் ஏழரை சனி,அஷ்டம சனி போன்ற சனியின் தொல்லைகள் நீங்கி வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.பெருமாளை இந்த நாளில் வழிபடுவதனால் நன்மை பயக்கும்.மேலும் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
புரட்டாசி மாதம் விரதம் இருப்பவர்கள் மாதம் முழுவதும் அசைவத்தை தவிர்ப்பது ஒரு நல்ல விதியாகும்.பெருமாளை முழு மனதுடன் பக்தி சிரத்தையுடன் வழிபடுவது நற்பலன்களை அளிக்கும். அவரவர் குடும்ப வழக்கப்படி பெருமாளுக்கு துளசி மாலை,வடை, துளசி மாலை, தளிகை படைத்து, சிலர் மாவிளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதம் இருந்து பெருமாளை தரிசிக்கும் பலனை இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் கிடைக்கும் என்பது ஐதீகம். அறிவியல் ரீதியாகவும் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
வீடுகளில் பெருமாள் பூஜை செய்துவிட்டு மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று நம்மால் இயன்ற தான தர்மங்கள் அங்கு யாசகம் கேட்பவர்களுக்கு அளிப்பது தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் மஹாளய அமாவாசை பற்றி பார்ப்போம்...
21.09.2025 புரட்டாசி மாதம் ஞாயிற்றுக்கிழமை மஹாலய அமாவாசை.
"மறந்தவர்களுக்கு மஹாலய அமாவாசை" என்ற கூற்று உண்டு அதாவது இறந்தவர்களின் "திதி" மறந்தவர்களுக்கு மஹாலய அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பானதாகும். நேரம்: அமாவாசை செப்டம்பர் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 :03 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 22ஆம் தேதி அதிகாலை 1.42 வரை அமாவாசை திதி உள்ளது.
மகாலய அமாவாசை அன்று முன்னோர்களுக்காக சிலர் தர்ப்பணம்,வழிபாடு, தானம் ஆகியவற்றை மேற்கொள்வார்கள். இவற்றை செய்வதினால் இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு அமைதி, எமலோக துன்பங்களில் இருந்து விடுதலை ஆகியவற்றை அளிக்கும். இதனால் அவர்களின் ஆன்மா மகிழ்ச்சி அடைந்து நமக்கும்,நம் சந்ததிகளுக்கும் அவர்களுடைய ஆசி நிச்சயம் கிடைக்கும். இதன் காரணமாக நம்முடைய குடும்பத்தில் இருக்கும் பித்ரு தோஷம்,பித்ரு சாபம், சுப காரிய தடைகள், பிரச்சனைகள் ஆகியவை நீங்கும் என்பது நம்பிக்கை.
மகாலய அமாவாசை வழிபாடு என்பது அவரவர் குடும்ப வழக்கப்படி படையலுக்கு தேவையான காய்கறிகள் முக்கியமாக பூசணிக்காய்,வாழைக்காய், வெண்பூசணி போன்ற காய்கறிகளை சமைப்பது, அகத்திக்கீரை, பருப்பு, வடை,பாயசம், அதிரசம், சுழியம் போன்ற இனிப்பு பண்டங்கள் வைத்து இறந்தவர்களுக்கு வஸ்திரங்கள் வைத்து வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.
சிலர் நீர் இலைகள் உள்ள இடங்களுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.அங்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு வீட்டில் படையல் இட்டு பூஜை செய்வார்கள். படைத்த உணவிலிருந்து காகத்திற்கு உணவளித்து பிறகு அனைவரும் உணவு உட்கொண்டு விரதம் முடிப்பார்கள். பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுப்பது நன்மை பயக்கும். இவ்வாறு வழிபாடு செய்வது முன்னோர்களின் மீதான மரியாதை மற்றும் அன்பை வெளிப்படுத்தும் சிறந்த முறையாகும்.
முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு அமைதியையும், நமக்கு துன்பங்களில் இருந்து விடுதலையும் தந்து காக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, மகாலய அமாவாசை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். இத்துணை பூஜை முறைகள்,வழிபாடுகள் செய்வது நமக்கு பின்னால் வரும் சந்ததியினருக்கு தெரியப்படுத்துவதற்காகவும்,வழி வழியாகவும் பூஜை முறைகள் செய்வது குடும்ப நெறிமுறைகளை தெரியப்படுத்துவதற்காகவும்,ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதற்காகவும் ஆகும்.
மேலும் இது போன்ற தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.