புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 20 26 செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாக உள்ள புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கும் முன்னோர்களின் வழிபாட்டிற்கும் மிகவும் உகந்த புனிதமான மாதமாகும்.
பெருமாள் திருமலையில் அவதரித்தது புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தான் என்று கூறப்படுகிறது. எனவே பெருமாளை மனதார நினைத்து வழிபட இம்மாதம் முழுவதும் ஏற்றதாகும். இம்மாதம் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பெருமாள் வழிபாடு செய்வது புரட்டாசி மாத சனிக்கிழமைகளுக்கே உரிய விசேஷமாகும்.
சனி தோஷம் உள்ளவர்கள் பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி, மாவிளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். புரட்டாசி மாதத்தின் முதல் 15 நாட்கள் 'மாகாளய பட்ச காலம்' எனப்படுகிறது. இந்த நாட்களில் நமது முன்னோர்கள் (பித்ருக்கள்) பூமிக்கு வந்து நம்முடன் தங்குவதாக ஐதீகம். இந்த மகாளய பட்சத்தில் நிறைவு நாளான புரட்டாசி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது குடும்பத்திற்கு நன்மைகளைத் தரும்.
புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் தசமி வரை 9 நாட்கள் அம்பிகையை போற்றும் "நவராத்திரி பெருவிழா" கோலாகலமாக அனைத்து இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி யுடன் நவராத்திரி விழா நிறைவடைகிறது.
அறிவியல் மற்றும் ஆன்மீகம் :
பருவநிலை மாறுபாடும் இந்த புரட்டாசி மாத காலத்தில் உடலைச் சீராக வைத்துக் கொள்ளவும்,ஆன்மீக சிந்தனையை வளர்த்துக் கொள்ளவும், முன்னோர்கள் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவை உட்கொள்ளும் முறையை வழக்கப்படுத்தியுள்ளனர். புரட்டாசி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாரை வழிபடுவதால் குடும்பத்தில் செல்வம் பெருகும்.சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
புரட்டாசி மாத விசேஷ நாட்கள் மற்றும் விரத நாட்கள் பற்றி பார்ப்போம்:
புரட்டாசி 1: செப்டம்பர் 18- வெள்ளிக்கிழமை அஷ்டமி திதி.
புரட்டாசி 2: செப்டம்பர் 19 - சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்ய முதல் சனிக்கிழமை நாள்.
புரட்டாசி 3: செப்டம்பர் 20- ஞாயிறு தசமி.
புரட்டாசி 5: செப்டம்பர் 22- செவ்வாய்க்கிழமை ஏகாதசி திதி.
புரட்டாசி 7: செப்டம்பர் 24 வியாழக்கிழமை பிரதோஷம்.
புரட்டாசி 9: செப்டம்பர் 26- சனிக்கிழமை பௌர்ணமி திதி. பெருமாள் வழிபாடு செய்ய உகந்த இரண்டாவது சனிக்கிழமை.
புரட்டாசி 12 :செப்டம்பர் 29 -செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுர்த்தி.
புரட்டாசி 13: செப்டம்பர் 30 -புதன்கிழமை கிருத்திகை.
புரட்டாசி 15 :அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை -காந்தி ஜெயந்தி,சஷ்டி விரதம்.
புரட்டாசி 16: அக்டோபர் 3 சனிக்கிழமை- பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த மூன்றாவது சனிக்கிழமை. அஷ்டமி திதி( தேய்பிறை ).
புரட்டாசி 17 : அக்டோபர் 4- ஞாயிறு நவமிதிதி.
புரட்டாசி 19 : அக்டோபர் 6 செவ்வாய்க்கிழமை ஏகாதசி திதி.
புரட்டாசி 21 : அக்டோபர் 8- வியாழக்கிழமை பிரதோஷம்.
புரட்டாசி 22: அக்டோபர் 9- வெள்ளிக்கிழமை மாத சிவராத்திரி.
புரட்டாசி 23 : அக்டோபர் 10 சனிக்கிழமை மஹாளய அமாவாசை. புரட்டாசி மாத பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த நான்காவது சனிக்கிழமை நாள்.
புரட்டாசி 24 : அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமை நவராத்திரி ஆரம்பம். நவராத்திரி முதல் நாள்.
புரட்டாசி 25 : அக்டோபர் 12 திங்கட்கிழமை நவராத்திரி இரண்டாம் நாள்.
புரட்டாசி 26 : அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை நவராத்திரி மூன்றாம் நாள்.
புரட்டாசி 27 : அக்டோபர் 14 புதன்கிழமை நவராத்திரி நான்காம் நாள்.
புரட்டாசி 28 : அக்டோபர் 15 வியாழக்கிழமை நவராத்திரி ஐந்தாம் நாள்.
புரட்டாசி 29 : அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை நவராத்திரி ஆறாம் நாள்.
புரட்டாசி 30 : அக்டோபர் 17 சனிக்கிழமை நவராத்திரி ஏழாம் நாள். பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த கடைசி சனிக்கிழமை.
செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வரை உள்ள இந்த புரட்டாசி மாத 30 நாட்களும் பெருமாள் அருளுடன், முன்னோர்களின் ஆசிகளுடன், அம்பிகையின் அருளுடன் நல்வாழ்வு வாழ்வோமாக.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.