Tamil Short Story: புதுமைப்பெண்!
- பாரதிராஜன்
சென்னையை அடுத்த புறநகர்ப் பகுதியான செங்குன்றத்தில் உள்ள ஓர் அரவை மில்லில் அன்று ஒரே போலீஸ் கூட்டம். உயர்மட்ட அதிகாரிகள் பலருக்கு நடுவே, சாதாரண உடையில் ஒரு பெண் மட்டும் அதிகாரிகளுடன் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தாள்.
அவள் பெயர் மணிமேகலை.
வெறும் ஆயிரம் ரூபாய் கடனுக்காக, மணிமேகலையின் ஒட்டுமொத்த குடும்பமும் அந்த அரவை மில்லில் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டிருந்தனர். மணிமேகலை ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற செய்தியைச் சொல்ல வந்தபோதுதான், அவளது பெற்றோர் மற்றும் தம்பி மாறன் ஆகியோருடன் சேர்த்து அவளையும் ஒரு வேனில் ஏற்றி அழைத்து வந்தனர். அந்த வேனில் இவர்களைப் போல இன்னும் சில குடும்பங்களும் இருந்தன. அனைவரும் அந்த அரவை மில்லில் இறக்கிவிடப்பட்டனர்.
நடப்பது என்ன என்பதைப் புரிந்துகொள்ளவே மணிமேகலைக்கு நீண்ட நேரம் ஆனது. அந்த இடத்தில், மற்ற குடும்பங்களைப் போலவே மணிமேகலையின் குடும்பமும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என முதலாளியால் ஆணையிடப்பட்டது.
தங்கள் நிலைமையை உணர்ந்த மணிமேகலை, அங்கிருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்து, அதைச் செயல்படுத்தவும் முடிவு செய்தாள். ஒருநாள் யாரும் எதிர்பாராத நேரத்தில் மில்லிலிருந்து வெளியே தப்பினாள். வழியில் ஒரு காவலரைச் சந்தித்து விவரத்தைத் தெரிவிக்க, அவர் அவளை ஒரு ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் அழைத்துச் சென்றார்.
அவர் மணிமேகலையிடம் விவரங்களைக் கேட்டறிந்து உதவி செய்வதாக உறுதியளித்தார். உடனடியாகச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள்தான் தற்போது அந்த அரவை மில்லில் ஆஜராகி இருக்கிறார்கள்.
சுமார் 50 பேர் அந்த மில்லில் கொத்தடிமைகளாக இருப்பது கண்டறியப்பட்டது. அரசு அலுவலர்கள் அவர்கள் அனைவரையும் மீட்டனர். மில் முதலாளிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, சட்டப்படி எச்சரிக்கப்பட்டார். 50 குடும்பங்களும் கொத்தடிமைத் தளையிலிருந்து விடுவிக்கப்பட்டன. மணிமேகலை நிஜமாகவே 'புதுமைப்பெண்ணாக'த் திகழ்ந்தாள்.
(பாரதிராஜன் என்கிற ரங்கராஜன், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த எழுத்தாளர்)