யாசகத்தோழி!

Apr 22, 2026,05:04 PM IST

- P.சுப்புலட்சுமி பிரமநாயகம், MCA,MA,B.Ed.


இந்த உலகத்தை அமைதியாக கவனித்துப் பார்த்தால், ஒரு மென்மையான உண்மை நம் உள்ளத்தில் வெளிச்சமாய் தோன்றும்.


யாசிப்பவர்களைப் பார்த்தால் 

சிலர் கருணையாளர்கள், 

சிலர் ஒதுங்கிச் செல்பவர்கள்.


யாசகம் என்பது சிலரின் நிலை அல்ல; அது வாழ்வின் இயல்பு என்பது ஆழ்ந்த சிந்தனை உணர்த்தும் அற்புதம்.

 இந்த பிரபஞ்சத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரும், எதையாவது யாசித்துக் கொண்டே தான் வாழ்கிறது.


பிறந்த குழந்தை தாயின் மார்பில் தலை வைத்து யாசிப்பது பசியை மட்டும் அல்ல,  அன்பையும் அரவணைப்பையும் சேர்த்து  தான்!.  காலம் செல்லச் செல்ல, அந்த யாசகத்தின் வடிவம் அறிவாகவும், அன்பாகவும், அங்கீகாரமாகவும் மாறுகிறது.




மனிதன் தன்னை முழுமையானவன் என்று எண்ணினாலும், அவன் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை யாசித்துக் கொண்டே தான் வாழ்கிறான். ஒரு புன்னகையை யாரிடமோ எதிர்பார்க்கிறான்; ஒரு வார்த்தை பாராட்டை நாடுகிறான்; ஒருவரின் அன்பில் தன்னை நிறைவு காண முயல்கிறான்.  கல்வி, காதல், செல்வம், 

ஆரோக்யம், அரவணைப்பு, வாக்கு, வழக்கு இவை அனைத்தும் வெளிப்படாத யாசகங்களே.


இயற்கையின் எந்த உயிரும் யாசகத்திலிருந்து விதிவிலக்கு பெற்றதாய் தெரியவில்லை.

பறவை தானியத்தை யாசிக்கிறது. 

மரம் மழையை யாசிக்கிறது.

 நதி மலையின் அருளை யாசிக்கிறது..


இந்த உண்மையை உணர்ந்தவனுக்கு, யாசகம் இழிவாகத் தோன்றாது. அது உயிர்களின் பரஸ்பர சார்பை வெளிப்படுத்தும் புனிதமான உணர்வாகத் தெரியும். “நாம் தருகிறோம்” என்று நினைக்கும் தருணங்களிலும் கூட, நாம் ஏதோ ஒன்றை பெற்றுக்கொண்டே தான் இருக்கிறோம் — உள்ளத்தின் அமைதி, திருப்தி, கருணை.


யாசிப்பதிலிருந்து விடுபட்ட உயிரே இல்லை என்பதை உணரும் போது, நம் பார்வை கருணையாய் மாறும்.


கோவில் வாசலில், அமைதியாக அமர்ந்திருக்கும் அந்த வயதான பெண்மணி—அவள் ஒரு சாதாரண யாசகி அல்ல. கையில் ஒரு சிறிய பாத்திரம், முகத்தில் காலம் வரைந்த கோடுகள், ஆனால் கண்களில் விளங்குவது ஒரு வியப்பூட்டும் அமைதி. யாராவது அருகில் வந்து ஏதாவது வைத்துச் சென்றால், அவள் மெதுவாக தலை அசைத்து நன்றியை வெளிப்படுத்துவாள்; யாரும் வராத நேரங்களில் அவள் அமைதியே அவளுக்குத் துணை.


இன்றைய உலகத்தில் பல மனிதர்களுக்கு செல்வமும், சுகவாழ்க்கையும் குறையாமலிருந்தும் இருந்தும் மனம் நிரம்புவதில்லை. 


ஒப்பீடுகள், குறை கூறல்கள், எப்போதும் ஏதோ ஒன்று பூர்த்தியடையாத வெற்றிடம். “இது இல்லையே”, “அது கிடைக்கவில்லையே” என்ற எண்ணங்கள் வாழ்க்கையின் இனிமையை மெல்ல மெல்ல கவர்ந்து விடுகின்றன.


ஆனால் அந்த யாசகத் தோழியிடம் அதிகம் எதுவும் இல்லை; அன்றைய நாள் அமைதியாக முடிந்தால் அதுவே போதும் என்ற மனநிலை. முகத்தில் ஒரு சாந்தம். 

போதுமென்ற மனப்பான்மை.

அது பொருளால் பெற முடியாத செல்வம்.


அவளது அமைதி ஒரு ஆழமான மொழி. வாழ்க்கையின் உண்மையான செல்வம் என்ன என்பதை வார்த்தைகளின்றி உணர்த்தும் மௌனப் பாடம். கிடைத்ததை நன்றியுடன் ஏற்றுக்கொள்வதும், இல்லாததை குறையாக எண்ணாமல் விடுவதும் தான் உண்மையான ஆனந்தம் என்பது தான் அவள் காட்டும் பாதை.


எல்லாம் இருப்பவர்களும் இல்லாததை எண்ணித் தான் வருந்துகிறார்கள்.


ஆனால் இந்த யாசகத் தோழி, எதுவும் இல்லாதபோதும், இருந்த சிறு தருணங்களிலேயே முழுமையை காண்கிறாள். அவளின் மனநிறைவும், அந்த அமைதியும் தான் வாழ்க்கையின் உயர்ந்த அழகு என்பதை உணர்த்துகிறது.


அவள் ஒரு யாசகி அல்ல; 

அவள் ஒரு மௌன குரு. 


வாழ்க்கையை எளிமையாக, இலகுவாக, நிறைவாக பார்க்கக் கற்றுத்தரும் ஒரு உன்னதமான உறவு. 

வார்த்தையின்றி, ஓசையின்றி வாழ்வியல் உண்மைகளை உணர்த்தும் ஒரு ஒளிப்பெட்டகம் தான் யாசகத் தோழி.


"யாசகம் என்பது உயிர்களை இணைக்கும் தெய்வீகமே!".


"எல்லா உயிரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியோம் பராபரமே!


(P.சுப்புலட்சுமி பிரமநாயகம், MCA,MA,B.Ed, சென்னையைச் சேர்ந்தவர் ஆசிரியை மற்றும் தமிழ் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்