புதுவசந்தம் (மினி தொடர்-1)
- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி
உருவாய் அருவாய் உளதாய் இளதாய்
மருவாய் மலராய்
மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய்
கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!!
கந்தர் அனுபூதியை பாடியபடியே ராஜம் பூஜையை முடித்து நகர்ந்தவளை வாசல் அழைப்பு மணி சத்தம் நிறுத்தியது. சிந்தனையுடன் கதவு திறந்தவள் அங்கே அவள் பெரியப்பா பிள்ளை முருகேசன் நிற்பது கண்டு முகம் மலர்ந்தாள்.
"வா தம்பி உள்ளே வா என்னப்பா அதிசயமா இந்தக் காலை நேரத்தில் வந்திருக்க என்ன விஷயம் தம்பி?"
நல்ல விஷயம் பேசத்தான் அக்கா நான் வந்திருக்கேன். நம்ம சுகந்திக்கு மாப்பிள்ளை விஷயமா புரோக்கர் மாரிமுத்துவிடம் சொல்லி வைத்திருந்தேன். அவர் எனக்கு கால் பண்ணி கைவசம் நல்ல ஒரு வரன் இருக்கு. சம்பந்தப்பட்டவரை கையோடு அழைச்சிட்டு ஒரு மணிநேரத்தில் இங்க வருவதாகச் சொன்னார் அக்கா. அவங்க வரும் சேதியை உன்கிட்டச் சொல்லிட்டுப் போகத்தான் அக்கா நான் வந்தேன் என்றான் முருகேசன் மூச்சு விடாமல்.
ரொம்ப சந்தோசம் தம்பி. சரி அவங்க வரும் போது வரட்டும். சூடா அடைதோசை இருக்கு. வந்து சாப்பிடு அப்புறம் பேசுவோம் என்ற அக்கா ராஜத்தின் வார்த்தைக்கு கட்டுப்பட்டவனாக அவளைப் பின் தொடர்ந்தான் முருகேசன்.
சூதுவாது அறியாது எல்லோரிடமும் வெள்ளந்தியாய்ப் பழகும் தம்பி முருகேசன் மீது ராஜம் மிகுந்த பாசம் வைத்திருந்தாள். இருவரும் பேசிக்கொண்டே அடைதோசையை காலி செய்தனர். சிறிது நேரத்தில் வாசலில் கார் சத்தம் கேட்க எட்டிப்பார்த்தான் முருகேசன். அக்கா அவங்க தான் வந்துட்டாங்க என்றவன் குரல் கேட்டு வந்த வெளியே வந்த ராஜம் வந்தவர்களை முகம் நிறைய மகிழ்ச்சியோடு வரவேற்று உபசரித்தாள்.
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு புரோக்கர் மாரிமுத்து ஏதோ பேச முற்பட அவரைக் கையமர்த்தியபடி குறுக்கிட்ட மாப்பிள்ளையின் தந்தை, இரு மாரிமுத்து நானே பேசுறேன் என்று தொடர்ந்தார்.
அம்மா என் பேரு மூர்த்தி. எனக்குப் பூர்வீகம் கடலூர். என் குடும்பம் சிதம்பரத்தில் இருக்கு. எனக்கு ஒரே பொண்ணு, ஐந்து ஆண் பிள்ளைகள் இருக்காங்க. நான் கேரளாவில் வனத்துறை அதிகாரியாகப் பணிசெய்கிறேன். என்னோட மூன்றாவது மகனுக்குப் பெண் பார்க்கும் படி இந்த மாரிமுத்துவிடம் சொல்லியிருந்தேன். அதனால உங்க பெண் சுகந்தியை என் மகனுக்காகப் பார்த்துப் பேசலாம்னு வந்திருக்கேன் என்ன மாரிமுத்து நான் சொல்றது சரிதானே என்றார் மூர்த்தி.
நல்லது அண்ணே. மூணாவது பையனுக்குப் பெண் பார்க்க வந்ததாகச் சொல்றீங்க. அப்போ மூத்தவங்க ரெண்டு பேருக்கும் எந்த ஊரில் சம்பந்தம் செய்திருக்கீங்க, மகளுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா? கேட்டாள் ராஜம்.
அம்மா என் ஒரே மகளுக்கு என் சொந்த அக்கா மகனைத்தான் கல்யாணம் பண்ணி வெச்சேன். அவங்களுக்கு ஆண் ஒன்று, பெண் ஒன்றுனு ரெண்டு பிள்ளைகள். கடலூரில் செட்டிலாகி நல்லாயிருக்காங்க.
என் பசங்க எல்லோரையும் நான் நல்லா தான் படிக்கவச்சேன். ஆனால் அதில் என் பசங்க ஐந்து பேரில் மூன்றாவதாகப் பிறந்தவன் தான் சுந்தர். மத்திய அரசுப்பணியில் கைநிறைய சம்பாதிக்கிறான். மூத்த பசங்க இரண்டு பேரும் சரி சுந்தருக்கு அடுத்த ரெண்டு பிள்ளைகளுக்கும் இன்னும் சரியா நல்ல வேலை அமையல. அதான் நான் சர்வீஸ்ல இருக்கும் போதே நல்லா படிச்சு, நல்ல வேலையில் இருக்கிற சுந்தருக்காவது கல்யாணம் பண்ணிப்பார்த்துடனும் என்று விரும்பறேன். எங்க குடும்பத்தில் என் பேச்சுக்கு யாரும் மறுபேச்சு பேச மாட்டாங்க. உங்க பொண்ணைப் பார்ப்போம், பெண் எனக்குப் பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசி நல்ல விஷயத்தை முடிக்கலாம்னு இருக்கேன். என்னம்மா சொல்றீங்க? என்றார் மூர்த்தி.
அப்போது ஒரு வயதான அம்மா ஒரு குழந்தையின் கை பிடித்தவாறு வீட்டுக்குள்ளே வர அவரைத் தொடர்ந்து ஒரு இளம் பெண் இடுப்பில் ஒரு குழந்தையைச் சுமந்தபடி வந்தனர்.
மூர்த்தி அவர்களை யோசனையோடு பார்க்க ராஜம் தொடர்ந்தாள். அண்ணே இவங்க என் சித்தி பேரு மீனாட்சி. இது என் பெரிய பொண்ணு வசந்தி. என்னோட இன்னொரு சித்தி மகனுக்குத் தான் இவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம். என் தம்பி இங்க கலெக்டர் ஆபீஸ்ல தான் நல்ல வேலைல இருந்தான். விதி போன வருடம் அவனுக்கு மாரடைப்பு ரூபத்தில் வந்து அவன் உயிரைப் பறிச்சிடுச்சு. இந்த ரெண்டு பெண் பிள்ளைகளும் என் மகள் வசந்தி பிள்ளைகள் தான் அண்ணே. நேற்று முன்தினம் இவள் கணவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள். அதுக்கு தான் நான் இங்க வந்தேன் என்றாள் ராஜம்.
அவள் குரலில் சிறு சோகம் வெளிப்பட்டதை உணர்ந்தார் மூர்த்தி.
அம்மா உங்க கணவர், குடும்பம் பத்தி சொல்றீங்களா? கேட்ட மூர்த்தியிடம் நான் சொல்றேங்க ஐயா என்றார் மீனாட்சி அம்மா. ஐயா என் அக்கா மகள் தான் இந்த ராஜம். எனக்குப் பிள்ளைகுட்டி இல்லீங்க. என் வீட்டுக்காரரின் அக்கா மகன் அதாவது என் நாத்தனார் மகன் தான் ராஜத்தோட புருஷன். என் மருமகன் வெளிநாட்டில் வேலை பார்க்குறாருங்க. இவளுக்கு ஐந்து புள்ளைங்க. மூத்தவ தான் இந்த வசந்தி. ரெண்டாவது பொண்ணு சுகந்தி. நிறையப் படிச்சிட்டு டீச்சர் வேலைக்குப் போய்ட்டு இருக்கா. மூணாவது பொண்ணு பாரதிக்கு கல்யாணம் ஆகிடுச்சுங்க. அவ காரைக்குடில தான் இருக்கா. கடைசியா என் ரெண்டு பேரனுக இங்க தான் படிச்சிட்டு இருக்காங்க என்றார் மீனாட்சி அம்மா.
எல்லாம் சரிங்க அம்மா. மூத்த பொண்ணு இருக்கும் போது ஏன் நீங்க கடைசிப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெச்சீங்க? காரணம் தெரிஞ்சிக்கலாமா?
கேட்ட மூர்த்தியை ஏறிட்டாள் வசந்தி.
அவள் ஏதோ பேச முயல முருகேசன் அவளை இடைமறித்து தொடர்ந்தான்.
அண்ணே நீங்க உங்க மனசுல என்ன நினைத்து கேட்டீங்களோ. நானே சொல்றேன். என் அக்கா பொண்ணு சுகந்தி சொக்கத்தங்கம். ரொம்ப பாசக்காரப் பொண்ணு. அவளைப் பிடிக்கலனு யாரும் சொல்லமுடியாது. என்னமோ தெரியல. கல்யாணம்னு பேச்செடுத்தாலே வெறுப்பாகிப் பேசறா. அவள் யாரையாவது விரும்பினால் அவனுக்கே அவளைக் கல்யாணம் பண்ணி வெச்சுடலாம்னு கூடச் சொன்னார் எங்க மாமா. அந்த மாதிரி காதல், கத்திரிக்காயும் இல்லைனு சொல்லிட்டா. அவ்வளவு ஏன் யாராவது அவளைப் பெண் பார்க்க வீட்டுக்கு வர்றாங்கனு அவளுக்கு தெரிஞ்சா உடனே எஸ்கேப் ஆயிடுவா. பெண் பார்க்க வந்தவங்க திரும்பிப் போனதும் தான் வீடு திரும்புவா. உண்மையில் சுகந்தி ரொம்பத் தங்கமான பொண்ணு. கல்யாணப் பேச்சு எடுத்தாலே எடுத்தெரிஞ்சு பேசிட்டுப் போறது தான் எங்க எல்லாருக்கும் வருத்தமா இருக்கு. கடவுள் தான் அவளுக்கு சீக்கிரம் நல்ல வழி காட்டனும் என்று பெருமூச்சுடன் சொல்லி முடித்தான் முருகேசன்.
(தொடரும்)
(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர். பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்)