பிரியாவிடை!
- த.ரஜிதா
சங்கீதம் சலனமாகி
சமரசம் போர்க்களமாகி
இரும்பை இதயத்தில்
உருக்கி ஊற்றி
வெந்தணல் வாட்டிய
காலம் அது.
இதற்குமேல் அங்கிருந்தால்
இறக்கை இழக்க நேரிடும்
என்று அடிபட்ட பறவையாய்
புகலிடம் தேடியபோது
கிடைத்திட்ட ஆலமரம் இது.
அடர்ந்த மரமோ மிகப்பெரிது.
எண்ணிலடங்கா புள்ளினங்கள்
'கீச் கீச் ' என குரல் கொடுக்க,
சிதறிய மனம் பதறியது.
பயமோ பெரிதாய் படர்ந்தது.
மார்கழிப் பனியோ
கடுங்குளிர் காட்ட
அத்துவான காட்டில்
ஆளறியா சிறு புல்லாய்(புள்ளாய்)
அரவமற்று அடங்கியது.
தை பிறந்தது.
தனிமை விலக,
தட்டிக்கொடுத்து,
தோள்கொடுக்க,
என் இருண்ட காலம்
வறண்டு போகாமலிருக்க
காத்தது
எண்ணிரண்டு மனங்கள்.
கேலி கிண்டலுக்கு இடமில்லை,
வேடிக்கை பார்த்து நகைக்கவில்லை,
கேள்விகளால் துளைக்கவில்லை,
வேள்விகளால் வேகவிடவுமில்லை.
பாசமும் நேசமும் பொழிந்ததுண்டு.
பண்டமும் பாத்திரமும் பரிமாறியதுண்டு.
பல கதைகள்
கதைத்ததுண்டு.
பதமாய் இதமாய்
கண் பனித்ததுண்டு.
மெல்ல விலகியது பின்பனி.
வண்ண வண்ண மலர்கள்
வாசம் வீசியது, பூத்துக்குலுங்கியது
மெதுவாய் வந்தது
வசந்தம்.
பட்ட புண் ஆறியது.
பலமாய் மனது மாறியது.
உளியால் செதுக்கிய வலிகளை
உரமாய் நெஞ்சம் மாற்றியது.
தேகமோ தானே தேறியது.
விடைபெறும் நேரம்...
தடை தாண்ட உதவி,
படை தந்த நட்பு(பூ)க்களுக்கு
மடை திறந்த வெள்ளமாய்
கண்கள் குளமாக
நன்றி நவில்கிறேன்.
"மீண்டும் இங்கேயே வாருங்கள்"
என்ற ஒருமித்த குரல்
உள்ளத்தில் ஓங்கி
ஒலித்துக் கொண்டே தான்
இருக்கிறது.
இருப்பிடம் மட்டுமே மாறும்.
இதயம் இங்கேயே வாழும்.
(அடைக்கலம் அளித்த மாடம்பாக்கம் பள்ளி ஆசிரிய பெருமக்களுக்கு சமர்ப்பணம்.)
(த.ரஜிதா, பட்டதாரி ஆசிரியர், ஆங்கிலம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, படப்பை)